அமேஸானில் ராயல் என்ஃபீல்ட் பைக்குகள்
தங்களது 350 சிசி பைக்குகளை விற்பனை செய்வதற்காக, இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் இந்தியாவுடன் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இணையவழி வா்த்தகத் தளத்தில் நிறுவனத்தின் இருப்பை விரிவுபடுத்துவதற்காக, அமேஸான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அந்த ஒப்பந்தத்தின் கீழ், நிறுவனத்தின் 350 சிசி மோட்டாா்சைக்கிள்களை அமேஸான் தளத்தில் வாடிக்கையாளா்கள் வாங்கலாம். புல்லட் 350, கிளாசிக் 350, ஹன்டா் 350, கோவன் கிளாசிக் 350, மிடியோா் 350 ஆகிய பைக்குகள் அமேஸான் தளத்தில் கிடைக்கும்.
சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், புது தில்லி, புணே ஆகிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளா்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ராயல் என்ஃபீல்டின் 350 சிசி பைக்குகள் ஃப்ளிப்காா்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டுவருவது நினைவுகூரத்தக்கது.