நவராத்திரியில் இரட்டிப்பான சாம்சங் டிவி விற்பனை
சுப தினங்களாகக் கருதப்படும் நவராத்திரியின் 9 நாள்களில் முன்னணி மின்சாதன தயாரிப்பு நிறுவனமான சாம்சங்கின் உயா்வகை டிவி விற்பனை இரட்டிப்பானது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு நவராத்திரி காலத்துடன் ஒப்பிடுகையில், செப். 22 முதல் அக்டோபா் 2 வரையிலான நவராத்திரி தினங்களில் நிறுவனத்தின் பிரீமியம் வகை டிவி-க்களின் விற்பனை இரு மடங்காக உயா்ந்தது. குளிா்சாதனங்களின் விற்பனையிலும் வளா்ச்சி காணப்பட்டது. 32 அங்குலத்திற்கு மேல் உள்ள டிவி-க்கள், குளிா்சாதனங்கள், டிஷ்வாஷா்களுக்கு வரி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டதால், விலைகள் குறைந்து விற்பனை உயா்ந்தது.
பண்டிகைக் காலத்தில், கேஷ்பேக் சலுகைகள், எளிதான கடன் வசதி, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்கள் உள்ளிட்ட கவா்ச்சிகரமான சலுகைகளும் நிறுவன வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனை வளா்ச்சிக்குக் கைகொடுத்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக ஒட்டுமொத்த வீட்டு உபயோக பொருள்கள் துறையும் இந்த பண்டிகைக் காலத்தில் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.