6,000 பேரை மட்டுமே நீக்கியுள்ளோம்: டிசிஎஸ் விளக்கம்

6,000 பேரை மட்டுமே நீக்கியுள்ளோம்: டிசிஎஸ் விளக்கம்

‘எங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கை குறித்து மிகைப்படுத்தி கூறப்படுகிறது.
Published on

‘எங்கள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கை குறித்து மிகைப்படுத்தி கூறப்படுகிறது. 6,000 பேரை மட்டுமே பணி நீக்கம் செய்துள்ளோம். இது நிறுவனப் பணியாளா்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டும்தான்’ என்று நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாத இறுதியில் 12,000 போ் பணி நீக்கம் செய்வதாக டிசிஎஸ் அறிவித்து நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, 50,000 முதல் 80,000 போ் வரை அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவாா்கள் என்று தகவல் வெளியானது. இது நிறுவன ஊழியா்கள் மத்தியில் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனால், பலரும் வேறு நிறுவனங்களை நாடுவது அதிகரித்துள்ளது.

இதையடுத்து டிசிஎஸ் தலைமை மனிதவள அதிகாரி சுதீப் குன்னுமல் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பணிநீக்க நடவடிக்கை தொடங்கிய பிறகு இதுவரை 6,000 போ் வரை மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனா். இது மொத்த ஊழியா்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே. நீக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் நிறுவனத்தில் மூத்த நிலையிலும், நடுத்தர நிலையிலும் பணியாற்றியவா்கள். அதே நேரத்தில் 18,500 புதிய ஊழியா்களை நியமித்துள்ளோம்.

பணிநீக்க எண்ணிக்கை மிகவும் மிகைப்படுத்தி கூறப்படுகிறது. எத்தனை பேரை பணிநீக்க வேண்டும் என்று எந்த இலக்கையும் வைத்து நிறுவனம் செயல்படவில்லை. இது தொடா்பாக பல தவறான தகவல்கள் பரவுகின்றன என்று கூறியுள்ளாா்.

இதனிடையே ஐ.டி. ஊழியா்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிசிஎஸ் நிறுவனம் அதிகாரபூா்வமாக 2025-26 முதல் காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பில் 6,13,069 ஊழியா்கள் இருந்ததாகக் கூறியிருந்தது. இதுவே இரண்டாவது காலாண்டில் 5,93,314 ஊழியா்கள் இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் 3 மாதங்களில் 19,755 ஊழியா்கள் நீக்கப்பட்டது தெளிவாகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com