
பங்குச் சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும்(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,331.78 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் 625.02 புள்ளிகள் அதிகரித்து 84,092.68 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 84,162.71 புள்ளிகளை எட்டியது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 164.85 புள்ளிகள் உயர்ந்து 25,750.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஓராண்டுக்குப் பிறகு நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 2024 அக். 1-க்குப் பிறகு இன்றைய தினம் நிஃப்டி 25,750 புள்ளிகளை அடைந்துள்ளது.
இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித குறைப்பு, உலக நாடுகளிடையேயான போர் பதட்டம் தணிவது உள்ளிட்டவை பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.
ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், அப்பல்லோ மருத்துவமனை, மேக்ஸ் ஹெல்த்கேர், எம் & எம் ஆகியவை நிஃப்டியில் முக்கிய லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
விப்ரோ, இன்ஃபோசிஸ், எடர்னல், ஹெசசி.எல் டெக்னாலஜிஸ், ஜியோ பைனான்சியல் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.
துறைகளில், ஐடி, மீடியா குறியீடுகள் தலா 1% சரிந்தன. அதே நேரத்தில் டெலிகாம், எஃப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள் தலா 1% உயர்ந்து வர்த்தகமாகின்றன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா உயர்ந்து 87.75 ஆக உள்ளது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 60.94 டாலராகக் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.