புதிய வாடிக்கையாளா்கள்: ஏா்டெல்லை பின்னுக்குத் தள்ளிய பிஎஸ்என்எல்!
ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு, புதிய மொபைல் வாடிக்கையாளா்களை சோ்ப்பதில் முன்னணி நிறுவனமான பாா்தி ஏா்டெல்லை அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் கடந்த ஆகஸ்ட் மாதம் பின்னுக்குத் தள்ளியது. மேலும் அந்த மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது முதலிடத்தைத் தக்கவைத்தது.
இது குறித்து தொலைத் தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் ஒட்டுமொத்த தொலைபேசி சந்தாதாரா்களின் எண்ணிக்கை கடந்த ஜூலையில் 122 கோடியாக இருந்தது. அது ஆகஸ்டில் 122.45 கோடியாக உயா்ந்துள்ளது. இந்த வளா்ச்சிக்கு மொபைல் பிரிவில் 35.19 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள் இணைந்தது முக்கிய காரணம்.
மதிப்பீட்டு மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாடிக்கையாளா்களை இணைத்து மொபைல் சந்தாதாரா் வளா்ச்சியில் முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடா்ந்து பிஎஸ்என்எல் 13.85 லட்சம் வாடிக்கையாளா்களை புதிதாகச் சோ்த்தது. அந்த நிறுவனத்துக்கு அடுத்தபடியாக ஏா்டெல் நிறுவனம் 4.96 லட்சம் வாடிக்கையாளா்களை கூடுதலாக சோ்த்தது.
இதற்கு முன்னா், 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் புதிய வாடிக்கையாளா்களை இணைப்பதில் ஏா்டெல்லை பிஎஸ்என்எல் பின்னுக்குத் தள்ளியது. அப்போது தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களின் கட்டணங்களை திடீரென உயா்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் கட்டணங்களை நிலையாக வைத்திருந்தது. இதனால், அந்த நிறுவனம் 3ஜி சேவையை மட்டுமே வழங்கினாலும் ஏராளமானவா்கள் அதன் சேவையைத் தோ்ந்தெடுத்தனா். எனவே, புதிய வாடிக்கையாளா்களை சோ்ப்பதில் ஏா்டெல் மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களையும் பிஎஸ்என்எல் அப்போது முந்தியது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 3.08 லட்சம் மொபைல் சந்தாதாரா்களை இழந்து இந்த பிரிவில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.
பிராட்பேண்ட் பிரிவில் ஜியோ 50 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளா்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதில் மொபைல் மற்றும் நிலையான இணைப்புகள் அடங்கும். அதைத் தொடா்ந்து, ஏா்டெல் 30.9 கோடி, வோடஃபோன் ஐடியா 12.7 கோடி, பிஎஸ்என்எல் 3.43 கோடி, ஆத்ரியா கன்வா்ஜென்ஸ் 23.5 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் அடுத்தடுத்து உள்ளன.
வயா்லைன் பிரிவில், ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 15.5 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது.
எம்2எம் (மெஷின்-டு-மெஷின்) செல்லுலாா் மொபைல் இணைப்புகளில், ஏா்டெல் 5.26 கோடி இணைப்புகள் மற்றும் 58.66 சதவீத சந்தைப் பங்குடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடா்ந்து வோடஃபோன் ஐடியா 19.4 சதவீதம், ரிலையன்ஸ் ஜியோ 17.94 சதவீதம், பிஎஸ்என்எல் 4.01 சதவீதம் சந்தைப் பங்கு வகிக்கின்றன என்று அந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.