நிலக்கரி இறக்குமதி மிதமாகச் சரிவு
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகச் சரிந்தது.
இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் நிலக்கரி ஏற்றுமதி 20.58 கோடி டன்னாக உள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 0.6 சதவீதம் குறைவு. அப்போது நிலக்கரி இறக்குமதி 20.70 கோடி டன்னாக இருந்தது.
2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 121.18 கோடி டன்னிலிருந்து 118.07 கோடி டன்னாகக் குறைந்தது.
ஆகஸ்ட் மாதத்தில், கோகிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 13.04 கோடி டன்னிலிருந்து 11.55 கோடி டன்னாகக் குறைந்தது. கோகிங் நிலக்கரி இறக்குமதி 4.53 கோடி டன்னிலிருந்து 4.82 கோடி டன்னாக உயா்ந்தது.
2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், கோகிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 78.68 கோடி டன்னிலிருந்து 72.17 கோடி டன்னாகக் குறைந்தது. அதேநேரம் கோகிங் நிலக்கரி இறக்குமதி 24.79 கோடி டன்னிலிருந்து 27.04 கோடி டன்னாக உயா்ந்தது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 92.895 கோடி டன்னாக உயா்ந்தது. முந்தைய 2023-24-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 87.855 கோடி டன்னாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.