

வெகு காலமாக பொருளாதார பாதுகாப்புக்கான சொத்தாக தங்கம் பார்க்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு சில மாதங்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
தீபாவளிக்கு முன்பு வரை ஒரே நேர்க்கோட்டில் உயர்ந்து வந்த தங்கம், ஒரு சவரனுக்கு எங்கே ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிடுமோ என்ற அச்சமே அனைவருக்கும் எழுந்திருந்தது.நல்ல வேளை பண்டிகை ஜோரில் தங்கம் விலை சற்று இறங்குமுகமாகத் தென்படத் தொடங்கி தற்போது விலை சற்றுக் குறைந்து வருகிறது.
இப்போது எல்லோருக்கும் இருக்கும் கேள்வி, இந்த இறங்குமுகம் தற்காலிகமானதா? எங்கு தொடங்கியதோ அதுவரை இறங்குமா? இல்லை மீண்டும் யு டர்ன் அடித்து புதிய உச்சங்களைத் தொடுமா என்பதே.
கிட்டத்தட்ட 2025ஆம் ஆண்டு இறுதி மாதங்களில் இருக்கிறோம். இப்போது 2026ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? தங்கம் விலை எவ்வாறு அமையும் என்ற கேள்விகளுக்கான விடைகளை யாராவது கொடுத்திருக்கிறார்களா என்று தேடியபோதுதான் கிடைத்திருப்பது பாபா வங்காவின் கணிப்பு.
சிறு வயதில் கண் பார்வை பறிபோனபோது, எதிர்காலங்களை கணிக்கும் ஆற்றலைப் பெற்றார் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா.
இவர், 2026ஆம் ஆண்டு பற்றி கணித்திருப்பது என்னவென்றால், சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படலாம், இதனால் தங்கத்தின் விலை உயரலாம் என்று பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தங்கம் விலை உயரக் காரணம்?
பல்வேறு சர்வதேச காரணிகள் இதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன. வர்த்தக அழுத்தங்கள், பணவீக்கம், பொருளாதார உறுதியற்ற தன்மை போன்றவை பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைப் பார்க்க வைக்கிறது. வரி விதிப்புகள், ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கம், சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் மந்தம் போன்றவையும் தங்கம் விலையை உயர்த்துகின்றன.
2026ம் இதே நிலைதானா?
வரும் 2026ஆம் ஆண்டு மிகப்பெரிய பணத்தட்டுப்பாடு, நிதி நெருக்கடி ஏற்படும், வங்கி அமைப்புகள், பங்குச் சந்தைகள் சரிவது, நிதி அமைப்பையே ஆட்டங்காண வைக்கும் என பாபா வங்கா கணித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற நேரங்களில் பொதுவாக தங்கம் உறுதியாக இருக்கும். கடந்த காலங்களில் இதுபோன்ற நெருக்கடி காலங்களில் 20 - 50 சதவிகிதம் தங்கம் விலை உயர்ந்தது. இதுவே 2026லும் நிகழலாம். 25 முதல் 40 சதவிகிதம் விலை உயரலாம். இந்தியாவில் அதிலும் குறிப்பாக அடுத்த தீபாவளி நேரத்தில் 10 கிராம் தங்கம் விலை ரூ.1,62,500 முதல் 1,82,000க்கு விற்பனையாகலாம் என கூறப்படுகிறது.
எனவே, அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் என்பதே முக்கிய கணிப்பாக இருக்கிறது.
நிறைவாக...
சர்வதேச அளவில் எந்த நிலை ஏற்பட்டாலும், தங்கத்தின் விலை மிகப்பெரிய சரிவையெல்லாம் அடையப்போவதில்லை. தங்கம் விலை 2026ஆம் ஆண்டில் விண்ணைத் தொடும் என்ற கணிப்பு உண்மையில் நடக்குமா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உறுதி. உலகளாவிய நெருக்கடியான காலங்களிலும், தங்கத்தின் விலை எப்போதும் குறைந்ததில்லை. அதளபாதாளத்துக்குச் சென்றதில்லை என்பதே.
இதையும் படிக்க... வெள்ளி வெறும் ஆபரணமல்ல! விலை உயர்வின் பின்னணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.