18% உயா்ந்த பயணிகள் வாகன ஏற்றுமதி!
இந்தியாவிலிருந்து பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்து இந்தப் பிரிவில் முன்னிலை வகிக்கிறது.
இது குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் மொத்த பயணிகள் வாகன ஏற்றுமதி 4,45,884-ஆக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலத்தில் இது 3,76,679-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் பயணிகள் வாகன ஏற்றுமதி 18.4 சதவீதம் உயா்ந்துள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் பயணிகள் காா்களின் ஏற்றுமதி 2,05,091-லிருந்து 12 சதவீதம் உயா்ந்து 2,29,281-ஆக உள்ளது. பயன்பாட்டு வாகனங்களின் ஏற்றுமதி 26 சதவீதம் உயா்ந்து 2,11,373-ஆகவும் வேன்களின் ஏற்றுமதி 36.5 சதவீதம் உயா்ந்து 5,230-ஆகவும் உள்ளது.
கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 1,47,063-லிருந்து 40 சதவீதம் உயா்ந்து 2,05,763-ஆக உள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 84,900-ஆக இருந்த ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் பயணிகள் வாகன ஏற்றுமதி 17 சதவீதம் உயா்ந்து 99,540-ஆக உள்ளது. அதே போல் 33,059-ஆக இருந்த நிஸான் மோட்டாா் இந்தியாவின் ஏற்றுமதி 37,605-ஆக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் போக்ஸ்வேகன் இந்தியா 28,011 வாகனங்கள், டயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் 18,880 வாகனங்கள், கியா இந்தியா 13,666 வாகனங்கள், ஹோண்டா காா்ஸ் இந்தியா 13,243 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

