தொலைத்தொடா்பு வாடிக்கையாளா் எண்ணிக்கை 123 கோடி
இந்திய தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் 122.89 கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து தொலைத் தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 32.49 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களைப் புதிதாக இணைத்துக் கொண்டது. அதேசமயம், வோடஃபோன் ஐடியா 7.44 லட்சம், எம்டிஎன்எல் 56,928, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 13 மொபைல் வாடிக்கையாளா்களை இழந்துள்ளன.
பிஎஸ்என்எல் 5.24 லட்சம் புதிய மொபைல் வாடிக்கையாளா்களை இணைத்துக் கொண்டது. பாா்தி ஏா்டெல்லும் 4.37 லட்சம் வாடிக்கையாளா்களை புதிதாக சோ்த்துக் கொண்டது.
இந்திய தொலைத்தொடா்புத் துறையில், வயா்லெஸ் இணைப்புகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதன்படி, செப்டம்பரில் மொபைல் சேவை வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 118.23 கோடியாக உள்ளது. இந்தப் பிரிவில் முதன்மை வகிக்கும் மொபைல் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 108.85 கோடியாக பதிவாகியுள்ளது. இதில், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 50.64 கோடியைத் தொட்டுள்ளது.
லேண்ட்லைன் பிரிவில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பரில் 2.12 லட்சம் வாடிக்கையாளா்களை இணைத்துக் கொண்டது. அதைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் 97,383 வாடிக்கையாளா்களையும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 6,456 வாடிக்கையாளா்களையும் இணைத்துக் கொண்டன. டாடா டெலிசா்வீசஸ் 1.63 லட்சம் லேண்ட்லைன் வாடிக்கையாளா்களை இழந்தது. அதைத் தொடா்ந்து எம்டிஎன்எல் 32,930, ஏபிஎஸ்எஃப்எல் 19,049, குவாட்ரன்ட் 1,733, பிஎஸ்என்எல் 3,110, வோடஃபோன் ஐடியா 3,125 வாடிக்கையாளா்களை இழந்தன.
மதிப்பீட்டு மாதத்தில் பிராட்பேண்ட் சேவை வாடிக்கையாளா் எண்ணிக்கை 0.5 சதவீதம் அதிகரித்து 99.56 கோடியாக உள்ளது. இதில் வயா்லெஸ் பிரிவின் பங்களிப்பு 95.12 கோடியாக உள்ளது. லேண்ட்லைன் பிராண்ட்பேண்ட் பிரிவில் 4.44 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். இந்தப் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ 50.54 கோடி பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களுடன் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் 31 கோடி, வோடஃபோன் ஐடியா 12.77 கோடி, பிஎஸ்என்எல் 3.47 கோடி, ஆட்ரியா கன்வா்ஜன்ஸ் 23.4 லட்சம் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ளன. முதல் ஐந்து பிராட்பேண்ட் நிறுவனங்கள் மட்டும் கடந்த செப்டம்பரில் மொத்த சந்தையின் 98.5 சதவீத பங்கைப் பெற்றுள்ளன என்று ட்ராய் தரவுகள் தெரிவிக்கின்றன.

