குறையும் தங்கம் விலை? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்! மக்கள் நிலை கவலைக்கிடம்!

தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் குழப்பத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர்.
gold rate
தங்கம் விலைIANS
Published on
Updated on
2 min read

கடந்த ஒரு சில மாதங்களாக கண்மூடித்தனமாக உயர்ந்து வந்த தங்கம் விலை ஒரு சில நாள்களாகக் குறைந்து வருகிறது. சரக்குப் பரிமாற்ற வர்த்தகமான எம்சிஎக்ஸ்-ல் கடந்த ஒரு சில நாள்களில் மட்டும் தங்கம் விலை ரூ.12 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.

தங்கம் விலை அக்டோபர் மாதத்தில் படிப்படியாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 வரை விற்பனையான நிலையில், தீபாவளி முதல் படிப்படியாகக் குறைந்து அக்.28ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.88,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இது ஒரு சவரன் தங்கம் விலையில் கிட்டத்தட்ட ரூ.9000 வரை குறைவாகும். இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ரூ.89,680க்கு வந்துள்ளது.

மஞ்சள் நிற உலோகமான தங்கம், தனது விலையில் கிட்டத்தட்ட 9.6 சதவிகிதத்தை இழந்துவிட்டது. எம்சிஎக்ஸ்-ல் 10 கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.1,32,294 வரை உயர்ந்திருந்த நிலையில், தற்போது விலை உயர்வுத் தொகை ரூ.1,19,605அக மாறியிருக்கிறது. இதன் மூலம் விலை ரூ.12,700 வரை குறைந்திருக்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த விலைக் குறைவு குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த விலைக் குறைவு என்பது, விலை வீழ்ச்சிக்கான ஆரம்பமா அல்லது இந்த விலைக் குறைவை பயன்படுத்தி அதிகமாக முதலீடு செய்ய வேண்டுமா? என்ற குழப்பத்திலும் இருக்கிறார்கள்.

இதே நேரத்தில், சர்வதேச காரணங்களின் தாக்கத்தால் பங்குச் சந்தைகள் ஏற்ற - இறக்கத்துடனே காணப்படுகிறது.

ஏன் தங்கம் விலை எகிறியது? இப்போது ஏன் குறைகிறது?

அமெரிக்காவுக்கு எதிராக, சீனா அதிகளவில் தங்கம் வாங்கி கையிருப்பில் வைத்தது. அதன் காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்தது. தற்போது அந்த நடவடிக்கை சற்று குறைக்கப்பட்டிருக்கலாம்.

இப்போது விலை குறைகிறது. இதற்கு முதல் காரணமாக இருப்பது, மக்களுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒன்று. அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான சாத்தியக் கூறுகள். இது தங்கத்தின் மீதான ஈர்ப்பைக் குறைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா - சீனா இடையேயான பதற்றம் ஓரளவுக்கு தணிந்திருப்பதும், தங்கத்தின் மீதான அதிகப்படியான முதலீட்டைக் குறைத்து விலைக் குறைவுக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்காவின் பெடரல் வங்கி, வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை, பெடரல் வங்கி, இந்த வாரம், வட்டிக் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டால், அது தங்கம் விலையில் எதிரொலிக்கும். அதாவது வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், தங்கம் போன்ற வட்டி இல்லாத சொத்துக்களின் வட்டி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, விலைக் குறைப்பு என்பது, நீண்ட கால முதலீட்டில் ஈடுபடுவோருக்கு ஒரு வாய்ப்பாகவே இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அதிக விலை கொடுத்து தங்கத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் சற்று பொறுமைகாக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மறுபக்கம், சாதாரண மக்களோ, இத்தனை நாள் ஒரு லட்சத்தை தங்கம் விலை தொட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். இப்போது தங்கம் விலை குறைந்து கொண்டிருப்பதால் இன்னும் குறையுமோ என்று எதிர்பார்த்து தங்கம் வாங்காமல் காத்திருப்பவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

மற்றொருபுறம், தங்கம் விலை இன்னும் உயர்ந்துவிடுமோ அல்லது வாங்க வேண்டிய நிர்பந்தத்தால் கிட்டத்தட்ட 95 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்து ஒரு கிராம் தங்கம் வாங்கியவர்கள், ஒரு வாரத்தில் இந்த அளவுக்குக் குறைந்துவிட்டதே என்றெண்ணி கலங்கி நிற்கிறார்கள்.

தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் ஏழை, எளிய மக்களுக்கு மட்டும் திண்டாட்டம்தான் தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com