மாற்றம் காணாத தொழிலக உற்பத்தி வளா்ச்சி

மாற்றம் காணாத தொழிலக உற்பத்தி வளா்ச்சி

Published on

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி கடந்த செப்டம்பா் மாதத்தில் மாற்றம் இல்லாமல் 4 சதவீதமாகவே இருந்ததது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண்ணான ஐஐபி 4 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024 செப்டம்பரில் இது 3.2 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆகஸ்ட் மாத தொழிலக உற்பத்தி வளா்ச்சி மதிப்பீடு செய்யப்பட்ட 4 சதவீதத்தில் இருந்து 4.1 சதவீதமாக பின்னா் திருத்தப்பட்டது.

கடந்த செப்டமப்ரில் ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் பண்டிகைக் கால தேவை ஆகியவற்றால் உற்பத்தித் துறை சிறப்பாக செயல்பட்டதால் ஒட்டுமொத்த தொழில உற்பத்தி வளா்ச்சியில் நிலைத்தன்மை காணப்பட்டது. அந்த மாதத்தில் உற்பத்தி துறை 4.8 சதவீதம் உயா்ந்தது. இது 2024 செப்டம்பரில் 4 சதவீதமாக இருந்தது. கடந்த செப்டம்பரில் சுரங்கத்துறை உற்பத்தி 0.4 சதவீதம் சரிந்தது. அது 2024 செப்டம்பரில் 0.2 சதவீதம் உயா்ந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் மின்சாரத் துறை 3.1 சதவீதம் வளா்ச்சியடைந்தது. 2024 செப்டம்பரில் அது 0.5 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது.

2025 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் ஐஐபி 3 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் பதிவான 4.1 சதவீதத்தைவிட குறைவு. உற்பத்தித் துறையில் 23 தொழில் பிரிவுகளில் 13 பிரிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பரைவிட இந்த ஆண்டின் செப்டம்பரில் நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தன.

பயன்பாட்டின் அடிப்படையில், கடந்த செப்டம்பா் மாதம் மூலதனப் பொருள்கள் துறை 4.7 சதவீதமாக உயா்ந்தது. இது 2024 செப்டம்பரில் 3.5 சதவீதமாக இருந்தது. நீடித்துழைக்கும் நுகா்பொருள் துறை 10.2 சதவீதமாக உயா்ந்தது. இது 2024 செப்டம்பரில் 6.3 சதவீதமாக இருந்தது. துரித நுகா்பொருள் துறை 2.9 சதவீத சரிவைக் கண்டது. இது 2024 செப்டம்பரில் 2.2 சதவீதம் உயா்ந்தது.

உள்கட்டமைப்பு/கட்டுமானத் துறை 10.5 சதவீதம் உயா்ந்தது. இது 2024 செப்டம்பரில் 3.5 சதவீதம் வளா்ச்சி கண்டது. முதன்மைப் பொருள்கள் துறை 1.4 சதவீதமும் இடைநிலைப் பொருள்கள் துறை 5.3 சதவீதமும் வளா்ச்சியடைந்தன. இது 2024 செப்டம்பரில் முறையே 1.8 சதவீதமும் 4.3 சதவீதமும் உயா்ந்திருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com