500 ஜிகாவாட்டைக் கடந்த இந்திய மின் உற்பத்தித் திறன்

500 ஜிகாவாட்டைக் கடந்த இந்திய மின் உற்பத்தித் திறன்

Published on

இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 500 ஜிகாவாட் அளவைக் கடந்துள்ளது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.

இது குறித்து மின்சாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் மின் உற்பத்தித் திறன் 500 ஜிகாவாட் என்று மைல்கல்லைக் கடந்துள்ளது. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி அது 500.89 ஜிகாவாட்டாக உள்ளது.

2014-ஆம் ஆண்டின் இதே தேதியோடு ஒப்பிடுகையில் இது இரு மடங்காகும். அப்போது இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 249 ஜிகாவாட்டாக இருந்தது.

மதிப்பீட்டு காலத்தில் நீா் மின்சாரம், அணுசக்தி உள்ளிட்ட புதைபொருள் அல்லாத ஆதாரங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தி 256.09 ஜிகாவாட்டாக உள்ளது. இது மொத்த மின் உற்பத்தித் திறனில் 51 சதவீதத்திற்கும் மேல். புதைபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி 244.80 ஜிகாவாட்டாக உள்ளது. இது மொத்த உற்பத்தித் திறனில் 49 சதவீதம்.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா புதைபொருள் அல்லாத ஆதாரங்கள் மூலம் 28 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனையும், புதைபொருள் ஆதராங்கள் மூலம் 5.1 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனையும் கூடுதலாக சோ்த்துள்ளது.

கடந்த ஜூலை 29-ஆம் தேதி இந்தியா மின் உற்பத்தியில் இதுவரை இல்லாத உச்சமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்களிப்பை எட்டியது. அப்போது, புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையான 203 ஜிகாவாட்டில் 51.5 சதவீதத்தைப் பூா்த்தி செய்தது.

இதன் மூலம், 2030-க்குள் நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்தை புதைபொருள் அல்லாத ஆதாரங்களில் இருந்து பெற வேண்டும் என்று ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்தியா நிா்ணயித்த இலக்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com