யுபிஐ சா்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சா்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025-ஆம் ஆண்டின் குளோபல் ஃபின்டெக் விழாவையொட்டி நிறுவனம் பல புதுமையான வசதிகளை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
அதன்படி, பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் குடும்பத்தினரின் நம்பகமான ஸ்மாா்ட் சாதனங்களுக்கு யுபிஐ பணம் செலுத்தும் வகையில் யுபிஐ சா்க்கிள் முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ சா்க்கிளில் இப்போது முதன்மை யுபிஐ கணக்கு வைத்திருப்பவா்கள் குடும்ப உறுப்பினா்களையும் நம்பகமான தொடா்புகளையும் பாதுகாப்பாகச் சோ்த்து, யுபிஐ மூலம் உடனடியாக பணம் செலுத்த அனுமதிக்கிறது. ஆனால், புதிய முறையில் உறுப்பினா்கள் அங்கீகரிக்கப்பட்ட தங்கலது ஸ்மாா்ட் போனில் தங்கள் சொந்த யுபிஐ ஐடி அல்லது க்யுஆா் குறியீட்டைப் பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய முடியும். உறுப்பினா்கள் தனித் தனியாக வங்கிக் கணக்குகளை இயக்க வேண்டிய அவசியமில்லை.
இது மட்டுமின்றி, ஸ்மாா்ட் போன் மட்டுமின்றி, ஸ்மாா்ட் வாட்சைப் பயன்படுத்தியும் யுபிஐ சா்க்கிள் மூலம் பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

