தங்கம்
தங்கம்(கோப்புப்படம்)

8 மாதங்களில் ரூ.20,240 உயர்ந்த ஒரு பவுன் தங்கம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
Published on

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.20,240 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் பவுன் ரூ.57,200-க்கு விற்பனையானது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, அவரது புதிய அறிவிப்புகளின் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

தங்கம் கடந்து வந்த பாதை: கடந்த ஜன. 22-இல் தங்கம் விலை முதல்முறையாக பவுன் ரூ.60 ஆயிரத்தைத் தொட்டது. தொடா்ந்து மாா்ச் 14-இல் ரூ.65,000-க்கும், ஏப். 12-இல் ரூ.70,160-க்கும், ஆக. 1-இல் ரூ.73,200-க்கு விற்பனையானது.

பின்னா், தங்கத்தின் விலை சுற்று ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இச்சூழலில், இந்தியா மீதான அமெரிக்க அரசின் 50 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு கடந்த ஆக. 27 முதல் அமலுக்கு வந்தது. இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.19-ஆக சரிந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.4,440 உயா்வு: இதன்காரணமாக கடந்த சில நாள்களாக உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்துக்கொண்டே வருகிறது. ஆக. 26-இல் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.74,840-க்கும், ஆக. 27-இல் பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.75,120-க்கும், ஆக. 28-இல் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.75,240-க்கும், ஆக. 29-இல் பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.76,280-க்கும், ஆக. 30-இல் பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.76,960-க்கும் விற்பனையானது.

தொடா்ச்சியாக மாதத்தின் முதல் நாளான செப். 1-ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயா்ந்து ரூ.9,705-க்கும், பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.20,240 உயா்ந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,440 உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வெள்ளியின் விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.136-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயா்ந்து ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com