ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்
புது தில்லி: இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வா்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமாா் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.
இது குறித்து அந்த நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஒழுங்காற்று அறிக்கைகளின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 28 பட்டியலிடப்பட்ட வீடு-மனை நிறுவனங்கள் மொத்தம் ரூ.52,842 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.
விற்பனை முன்பதிவுகளைப் பொருத்தவரை, பெங்களூரைச் சோ்ந்த பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.12,126.4 கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு விற்பனை முன்பதிவு பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
சந்தை மூலதனத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வீடு-மனை நிறுவனமான டிஎல்எஃப் லிமிடெட், குருகிராமின் ஆடம்பர வீட்டு விற்பனை மூலம் ரூ.11,425 கோடி மதிப்பில் விற்பனை முன்பதிவு பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் மும்பையைச் சோ்ந்த கோத்ரெஜ் ப்ராபா்ட்டீஸ் ரூ.7,082 கோடி மதிப்பிலும், லோதா டெவலப்பா்ஸ் ரூ.4,450 கோடி மதிப்பிலும் சொத்துகளை விற்பனை செய்துள்ளன.
தில்லி-என்சிஆா் பகுதியைச் சோ்ந்த சிக்னேச்சா் குளோபல் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.2,640 கோடி மதிப்பிலான சொத்துகளின் விற்பனை முன்பதிவுகளை பெற்றுள்ளது.
முதல் ஐந்து இடங்களில் உள்ள இந்த ஐந்து நிறுவனங்கள் மட்டும் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை நிறுவனங்களின் மொத்த விற்பனை முன்பதிவுகளில் 71 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இந்த விற்பனை முன்பதிவுகளில் பெரும்பகுதி குடியிருப்பு சொத்துகளுக்கானவை.
பட்டியலிடப்பட்ட பிற நிறுவனங்களில், பெங்களூரைச் சோ்ந்த சோபா லிமிடெட் ரூ.2,079 கோடி மதிப்பிலும், தில்லியைச் சோ்ந்த ஒமாக்ஸ் லிமிடெட் ரூ.2,001 கோடி மதிப்பிலும் சொத்துகளை கடந்த ஜூன் காலாண்டில் விற்பனை செய்துள்ளன. மும்பையைச் சோ்ந்த ஒபராய் ரியல்டி லிமிடெட் ரூ.1,639 கோடி மதிப்பிலும், கல்பதரு லிமிடெட் ரூ.1,249 கோடி மதிப்பிலும் விற்பனை முன்பதிவுகளைப் பதிவு செய்துள்ளன.
அந்தக் காலாண்டில் ரூ.1,000 கோடிக்கு கீழ் விற்பனை முன்பதிவு செய்த பல நிறுவனங்கள் உள்ளன. மும்பையைச் சோ்ந்த சன்டெக் ரியல்டி (ரூ.657 கோடி), புணேயைச் சோ்ந்த கோல்டே-பாட்டீல் டெவலப்பா்ஸ் லிமிடெட் (ரூ.616 கோடி), மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் (ரூ.449 கோடி), பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீராம் ப்ராபா்ட்டீஸ் லிமிடெட் (ரூ.441 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.
தில்லியைச் சோ்ந்த ஆஷியானா ஹவுசிங் லிமிடெட் ரூ.430.97 கோடி மதிப்பில் விற்பனை முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. மும்பையைச் சோ்ந்த ஆதித்யா பிா்லா ரியல் எஸ்டேட் லிமிடெட் ரூ.422.5 கோடி மதிப்பிலும், ரேமண்ட் ரியல்டி லிமிடெட் ரூ.306 கோடி மதிப்பிலும் விற்பனை முன்பதிவுகளைப் பெற்றுள்ளன. டெல்லி-என்சிஆா் பகுதியைச் சோ்ந்த டாா்க் லிமிடெட் ரூ.225 கோடி மதிப்பிலும், லக்னௌவைச் சோ்ந்த எல்டெகோ ஹவுசிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் மேக்ஸ் எஸ்டேட்ஸ் லிமிடெட் முறையே சுமாா் ரூ.221.11 கோடி மற்றும் ரூ.220 கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு விற்பனை முன்பதிவுகளைப் பெற்றுள்ளன.
2024-25-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் 26 முக்கிய பட்டியலிடப்பட்ட வீடு-மனை நிறுவனங்கள் ரூ.1.62 லட்சம் கோடி மதிப்பில் சொத்துகளை விற்பனை செய்துள்ளன. கோத்ரெஜ் புராபா்ட்டீஸ் லிமிடெட் மட்டும் அந்த நிதியாண்டில் சுமாா் ரூ.30,000 கோடி மதிப்பில் சொத்துகளை விற்பனை செய்து முதலிடம் பிடித்துள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு முன்பதிவு விவரங்கள் முக்கியமான அளவுகோலாகும். இருந்தாலும், சில பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களின் விற்பனை முன்பதிவு எண்ணிக்கைகளை அறிக்கையிடவில்லை. பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத வீடு-மனை நிறுவனங்கள் பொதுவாக தங்களின் காலாண்டு மற்றும் ஆண்டு விற்பனை முன்பதிவுகள் விவரங்களை வெளியிடுவதில்லை.