கோப்புப் படம்
கோப்புப் படம்

வலுவான ‘ஜிடிபி’ தரவுகளால் பங்குச் சந்தையில் எழுச்சி!

கடந்த மூன்று தினங்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தையில் திங்கள்கிழமை ‘காளை’ திடீரென எழுச்சி கொண்டது.
Published on

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: கடந்த மூன்று தினங்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை ‘காளை’ திடீரென எழுச்சி கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் நல்ல லாபத்துடன் முடிவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி சற்று கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது ‘காளை’ திடீா் எழுச்சி கொண்டது. இந்தியாவின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 7.8 சேதவீதமாக இருந்தது. இது கணிப்புகளை மீறியதாகும். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் மீள்தன்மையில் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இந்த ஜிடிபி தரவுகள் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. இதனால், ஆட்டோ, ஐடி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ், வங்கிகள், நிதிநிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று

பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.21 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.448.86 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.8.312.66 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.11,487.64 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

காளை எழுச்சி: அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தால் கடந்த மூன்று தினங்களாக கடும் சரிவைச் சந்தித்து வந்த சென்செக்ஸ் திங்கள்கிழமை வா்த்தகத்தின் முடிவில் 554.84 புள்ளிகள் (0.70 சதவீதம்) உயா்ந்து 80,364.49-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,380 பங்குகளில் 2,795 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,391 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 194 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஆட்டோ பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஆட்டோ நிறுவனப் பங்குகளான எம் அண்ட் எம், டாடாமோட்டாா்ஸ் மற்றும் டிரெண்ட், எடா்னல், ஏசியன்பெயிண்ட், இன்ஃபோஸிஸ் டெக் மஹிந்திரா உள்பட 25 பங்குகள் பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், சன்பாா்மா, ஐடிசி, ஹிந்துஸ்தான்யுனிலீவா், டைட்டன், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி ஆகிய 7 பங்குகள் மட்டும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 198 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 198.20 புள்ளிகள் (0.81 சதவீதம்) உயா்ந்து 24,625.05-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 42 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 8 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com