
இன்னும் சில நாள்களில் சந்தையில் அறிமுகமாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 17 மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபோன் 17 மாடல்களில் புது அம்சங்கள் என்னென்ன இருக்கப்போகிறது, அதிலும் குறிப்பாக, அதன் முந்தைய மாடலான ஐபோன் 16-ஐ விட மேம்பட்ட அம்சங்கள் என்னென்ன ஐபோன் 17-இல் புதிதாக வரப்போகிறதென ஸ்மார்ட்போன் சந்தையில் பரவலாக எதிர்பார்க்கப்படுபவற்றைப் பார்க்கலாம்...
6.3 இன்ச் ஓஎல்இடி தொடுதிரையுடன் சற்று பெரிதாக இருக்கப்போகிறது புதிய ஐபோன் 17. ஆப்பிளில் முதல்முறையாக ஐபோன் 17-இன் அனைத்து ரகங்களிலும் 120 ஹெர்ட்ஸ் ப்ரோ-மோஷன் கொடுக்கப்படும் என்கிறார்கள்.
புதிதாக அறிமுகமாகவுள்ள ‘ஐபோன் 17 ஏர்’ மாடல் மிக மெல்லியதாக, அதாவது 5.5 மி.மீ. அடர்த்தியில் எல்டிபிஓ தொழில்நுட்பத்துடன் வரவிருக்கிறதாம்.
ஐபோன் 17-இல் புத்தம்புதிய சிப்செட்டான ‘ஏ19’ ரக சிப் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். அதிலும், ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் ‘ஏ19 ப்ரோ’ சிப் இடம்பெற்றிருக்குமாம். இதனால், ஐபோன் 16-ஐ விட மேம்பட்ட செயல்பாட்டை ஐபோன் 17 மாடல்களில் எதிர்பார்க்கலாம். ஐபோன் 16 மாடல்களில் ஏ18 சிப் பொருத்தப்பட்டு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஏர் ரகங்களில், 12 ஜிபி ரேம் நினைவுத்திறன் கொடுக்கப்படுமாம். அதேபோல, வைஃபை 7 அம்சம் இருப்பதால் நெட்வொர்க் தொடர்பு மற்றும் பயன்பாட்டின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
முன்பக்க கேமராவின் ரிசொலியூஷன் 12 எம்பி அளவிலிருந்து 24 எம்பி ஆக இரட்டிப்பாக்கப்படுகிறதாம். இந்த மேம்பாடானது ஐபோன் 17 அனைத்து ரகங்களிலும் வரவிருக்கிறதாம்.
ஐபோன் 17 ப்ரோ மாடல்களில் மட்டும், பின்பக்க கேமரா லென்ச்களில் மேம்பட்ட 48 எம்பி சென்சார்கள் இடம்பெற்றிருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால், வெளிச்சம் குறைந்த இடத்திலும் ஐபோன் 17 மாடலில் அதி துல்லியத்துடன் படம்பிடிக்கப்படும் புகைப்படங்கள் ‘வாவ்..!’ சொல்லவைக்கும் என்று எதிர்பார்க்கலாம்!
பேட்டரி சார்ஜிங் திறன் 35 வாட்ஸ் அளவுக்கு அதிகரிக்கப்படுகிறது இந்த புது மாடல்களில். வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பில், க்யூஐ 2.2 தரத்தில் 50 வாட்ஸ் திறனுடன் ஐபோன் 17 மாடல்கள் வருகிறதாம்.
செப். 9-இல் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஐபோன் 17 ஆரம்ப மாடலின் விலை ரூ. 79,900-ஆக நிர்ணயிக்கப்படும் என்றும், ஐபோன் 17 ப்ரோ மாடல் ஆரம்ப விலை ரூ. 1,29,900-ஆக நிர்ணயிக்கப்படும் என்கிறார்கள். புதிதாக ஐபோன் வாங்க விருப்பப்படுபவர்களுக்கு ஐபோன் 17 மாடல் ‘விலைக்கு ஏற்ற வகையிலான’ முந்தைய ரகங்களைவிட புத்தம்புது மேம்பட்ட அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.