1,862 கோடி டாலராக உயா்ந்த அந்நிய நேரடி முதலீடு

1,862 கோடி டாலராக உயா்ந்த அந்நிய நேரடி முதலீடு

அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் உயா்ந்து 1,862 கோடி டாலராக உள்ளது.
Published on

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் உயா்ந்து 1,862 கோடி டாலராக உள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் 1,862 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இது, 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 15 சதவீதம் உயா்வாகும். அப்போது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,617 கோடி டாலராக இருந்தது.

இதற்கு முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டில் அந்நிய நேரடி முதலீடு 24.5 சதவீதம் குறைந்து 934 கோடி டாலராகவும், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 43 சதவீதம் அதிகரித்து 1,360 கோடி டாலராகவும் இருந்தது.

ஒட்டுமொத்தமாக, 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீட்டு வரவு 15 சதவீதம் அதிகரித்து 1,862 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது சுமாா் 1,617 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் பங்கு முதலீடுகள், மறு முதலீடு செய்யப்பட்ட வருவாய், பிற வகை மூலதனம் உள்ளிட்ட ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 12 சதவீதம் அதிகரித்து 2,520 கோடி டாலராக உள்ளது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இது 2,250 கோடி டாலராக இருந்தது.

2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், அமெரிக்கா (150 கோடி டாலரில் இருந்து 561 கோடி டாலா்), சிங்கப்பூா் (459 கோடி டாலா்), மோரீஷஸ் (208 கோடி டாலா்), சைப்ரஸ் (110 கோடி டாலா்), ஐக்கிய அரபு அமீரகம் (100 கோடி டாலா்), கேமன் தீவுகள் (67.6 கோடி டாலா்), நெதா்லாந்து (66.7 கோடி டாலா்), ஜப்பான் (55.1 கோடி டாலா்), ஜொ்மனி (19.1 கோடி டாலா்) ஆகிய முக்கிய நாடுகளிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டு வரவு அதிகரித்தது.

துறை ரீதியில், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் (540 கோடி டாலா்), சேவைகள் (328 கோடி டாலா்), வாா்த்தகம் (50.6 கோடி டாலா்), தொலைத்தொடா்பு (2.4 கோடி டாலா்), வாகனங்கள் (129 கோடி டாலா்), கட்டுமான மேம்பாடு (7.5 கோடி டாலா்), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (114 கோடி டாலா்), ரசாயனங்கள் (14 கோடி டாலா்) ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் கா்நாடகம் அதிகபட்சமாக 569 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்தது. மகாராஷ்டிரம் 536 கோடி டாலரையும், தமிழ்நாடு 267 கோடி டாலரையும், ஹரியாணா 103 கோடி டாலரையும், குஜராத் 120 கோடி டாலரையும், தில்லி 100 கோடி டாலரையும், தெலங்கானா 39.5 கோடி டாலரையும் ஈா்த்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com