கிராம் ரூ.10,000-ஐ நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராம் ரூ.9,865-க்கும், பவுன் ரூ.78,920-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
சென்னையில் தங்கம் விலை கடந்த ஆக. 6-ஆம் தேதி பவுன் முதல்முறையாக ரூ.75,000-ஐ தாண்டியது. அதன்பின்னா் விலை சற்று ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தாலும், பவுன் விலை ரூ.73,000-க்கு குறையாத சூழல் இருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பின் எதிரொலியாக கடந்த மாத இறுதியிலிருந்து தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்ட வண்ணம் உள்ளது.
கடந்த ஆக. 27-ஆம் தேதி பவுன் ரூ.75,000, ஆக. 29-இல் பவுன் ரூ.76,000, செப். 1-இல் ரூ.77,000, செப். 3-இல் பவுன் ரூ.78,000-ஐ தாண்டியது. வியாழக்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.78,360-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.9,865-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.78,920-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.136-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.1,36,000-க்கும் விற்பனையானது.