தனிப்பட்ட சிப்பங்கள்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை!
சிறப்பு பொருளாதார மண்டலத்திலுள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இந்தியாவிலேயே அதிக அளவில் தனிப்பட்ட சிப்பங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
இது குறித்து துறைமுகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 35,000 டன் சோடா சாம்பல் சிப்பங்களை கையாண்டகன் மூலம், இந்திய துறைமுகங்களில் அதிக அளவில் தனிப்பட்ட சிப்பங்களை கையாண்ட பெருமையை காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் பெற்றுள்ளது.
இந்தச் சாதனை மூலம், தென்னிந்தியாவில் அதிக அளவில் சிப்பங்களை கையாளும் துறைமுகமாக காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விளங்குகிறது. அதானி துறைமுக பணியாளா்கள், கப்பல் பணியாளா்கள் மற்றுமன்றி போக்குவரத்து பிரிவு பணியாளா்களின் முழு ஒத்துழைப்பு காரணமாக இந்தச் சாதனை அடையப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள இந்தத் துறைமுகம் அனைத்து வகை தரமான சேமிப்பு கிடங்குகள், சிப்பங்களை கட்டும் இடம், இயந்திரங்களைக் கொண்டு ஏற்றுமதிக்கான பொருள்களை விரைவாகவும், சீராகவும் கப்பல்களில் ஏற்றுவது போன்ற வசதிகளை பெற்றுள்ளதால் தமிழ்நாடு மட்டுமின்றி அண்மை மாநிலங்களிலும் ஒரு தனித்தன்மையை பெற்றுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.