38 கோடி டன்னாகச் சரிந்த நிலக்கரி உற்பத்தி
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 38.18 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகத்தின் தற்காலிக தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 0.6 சதவீதம் குறைந்து 38.18 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 38.40 கோடி டன்னாக இருந்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தின் மொத்த உற்பத்தியான 38.18 கோடி டன்னில், கோல் இந்தியா 28.02 கோடி டன், சிங்கரேனி கோலியரீஸ் நிறுவனம் 2.42 கோடி டன், கேப்டிவ் மற்றும் பிற நிறுவனங்கள் 7.74 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்தன. நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா 80 சதவீதத்திற்கு மேல் பங்களிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 2024 ஆகஸ்ட் மாதத்தைவிட 11.5 சதவீதம் உயா்ந்து 6.99 கோடி டன்னாக உள்ளது. முந்தைய ஆகஸ்டில் இது 6.26 கோடி டன்னாக இருந்தது.
நிலக்கரி உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கை நடவடிக்கைகள், கடுமையான கண்காணிப்பு, இந்தத் துறையைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்படும் தொடா்ச்சியான ஆதரவு ஆகியவை இத்துறையின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளன.
கேப்டிவ் மற்றும் வா்த்தக நிலக்கரி சுரங்கங்களின் முழு திறனை உணா்ந்து, நிலையான உற்பத்தியை பராமரித்து, விநியோக பின்னடைவுகளைக் குறைத்து, நாட்டின் எரிசக்தி தேவைக்கு உள்நாட்டு உற்பத்தி கணிசமான பங்களிப்பு வழங்குவதற்கான நிலையை ஏற்படுத்த நிலக்கரி துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.