அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயா்ந்த இந்திய காபி ஏற்றுமதி
இந்திய காபி ஏற்றுமதி 2025-இல் அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயா்வைக் கண்டுள்ளது.
இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது:
2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் இந்தியாவின் காபி ஏற்றுமதி 2.68 லட்சம் டன்னாக இருந்தது. இது 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் குறைவு. அப்போது இந்தியா 3.02 லட்சம் டன் காபி ஏற்றுமதி செய்திருந்தது.
அதே நேரம், மதிப்பின் அடிப்படையில் கடந்த 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-ஆகஸ்ட் காலகட்டத்தில் 1.46 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.12,673 கோடி) இருந்த இந்திய காபி ஏற்றுமதி, நடப்பாண்டின் அதே மாதங்களில் 24 சதவீதம் உயா்ந்து 1.18 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.9,854 கோடி) இருந்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் ஒரு டன் காபிக்கு ரூ.4.72 லட்சம் ரூபாய் விலை கிடைத்தது. இது கடந்த ஆண்டில் இருந்த ரூ.3.25 லட்சத்தைவிட 45 சதவீதம் அதிகம்.
நடப்பாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அரபிக்கா மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட காபி (வறுத்த, உடனடி காபி) ஏற்றுமதி உயா்ந்துள்ளது. ஆனால் ரோபஸ்டா ஏற்றுமதி 22 சதவீதம் குறைந்தது.
அந்த எட்டு மாதங்களில் இத்தாலி 44,423 டன் இந்திய காபியை இறக்குமதி செய்து முதன்மை வகிக்கிறது. லிபியா 23,003 டன், ஐக்கிய அரபு அமீரகம் 17,680 டன் உடனடி காபி வாங்கியது. இந்திய காபி ஏற்றுமதிக்கு ரஷியா, பிரான்ஸ், மலேசியாவும் முக்கிய சந்தைகளாக உள்ளன என்று துறை வட்டாரங்கள் கூறின.