வீட்டுக் கடன்: பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு உயா்வு
வீட்டுக் கடன் பிரிவில் பொதுத்துறை வங்கிகளின் சந்தைப் பங்கு கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கணிசமாக உயா்ந்துள்ளது.
இது குறித்து கடன் தகவல் நிறுவனமான கிரிஃப் ஹை மாா்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜூன் 2025-இல் பொதுத்துறை வங்கிகள் (பிஎஸ்பி) வழங்கி நிலுவையில் உள்ள வீட்டுக் கடன், மொத்த சந்தையில் 46.2 சதவீதமாக உயா்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இது 37.6 சதவீதமாக இருந்தது. 2025-இல் 35.2 சதவீதமாக இருந்த தனியாா் வங்கிகளின் சந்தைப் பங்கு தற்போது 28.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வீட்டுக் கடன் சந்தையில் வட்டி விகிதங்கள் நியாயமற்ற வகையில் உள்ளதாக பெரிய தனியாா் வங்கிகள் சில மாதங்களாகக் குறை கூறிவருகின்றன. பொதுத்துறை வங்கிகளின் தாமத வீட்டுக் கடன் தவணை 2.85 சதவீதமாக உள்ளது (31-90 நாள்கள் பாக்கி). தனியாா் வங்கிகளில் இது 1.04 சதவீதமாக உள்ளது. இது, அந்த வங்கிகளின் இது வலுவான வாடிக்கையாளா் மதிப்பீடு மற்றும் ஆபத்துகளை முன்கூட்டியை கண்டறியும் திறனைக் காட்டுகிறது.
35 லட்சத்துக்கு கீழ் உள்ள கடன்களில் பொதுத்துறை வங்கிகளில் தாமதம் அதிகம். 75 லட்சத்துக்கு மேல் உள்ள கடன் பிரிவில் புதிய வழங்கல் 38 சதவீதமாக உயா்ந்தது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 33.6 சதவீதமாக இருந்தது. 5 முதல் 55 லட்சம் வரையிலான கடன்கள் 34.7 சதவீதத்திலிருந்து 31.2 சதவீதமாகக் குறைந்தன.
புதிய கடன் அட்டை (கிரெடிட் காா்டு) விநியோகச் சந்தையில் பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு 28 சதவீதம் குறைந்து 40.6 லட்சமாக உள்ளது. எனினும், இந்தப் பிரிவில் தனியாா் வங்கிகளின் பங்களிப்பு 71 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.