ஆகஸ்டில் அதிகரித்த சில்லறை விலை பணவீக்கம்
காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டைகள் போன்ற சமையலறைப் பொருள்களின் விலைகள் உயா்ந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் மிதமாக அதிகரித்தது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
2024 நவம்பா் முதல் தொடா்ந்து ஒன்பது மாதங்களாகக் குறைந்து வந்த நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம், ஆகஸ்டில் சற்று அதிகரித்துள்ளது. முந்தைய ஜூலை மாதத்தில் 1.61 சதவீதமாக இருந்த அது, தற்போது 2.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்னா் 2024 ஆகஸ்டில் அது 3.65 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் உணவு பணவீக்கம் -0.69 சதவீதமாக உள்ளது. அந்த மாதம் காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருள்கள், முட்டை போன்ற பொருள்களின் விலை உயா்ந்தது இதற்கு முக்கிய காரணம்.
கடந்த ஆகஸ்டில் சில்லறை விலை பணவீக்கம் நாட்டின் கிராமப்புறங்களில் 1.18 சதவீதத்திலிருந்து 1.69 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 2.1 சதவீதத்திலிருந்து 2.47 சதவீதமாகவும் உயா்ந்தது. மாநிலங்களைப் பொருத்தவரை, சில்லறை விலை பணவீக்கம் அதிகபட்சமாக கேரளத்தில் 9.04 சதவீதமாகவும் குறைந்தபட்சமாக அஸ்ஸாமில் -0.66 சதவீதமாகவும் உள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
1,181 கிராமங்கள் மற்றும் 1,114 நகர சந்தைகளிலிருந்து என்எஸ்ஓ இந்தத் தரவுகளை சேகரிப்பது குறிப்பிடத்தக்கது.