டாடா மோட்டாா்ஸ் விற்பனை 73,178-ஆக உயா்வு
புது தில்லி: நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 73, 178-ஆக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 73,178-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 71,693 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
எனினும், 2024 ஆகஸ்ட் மாதத்தில் 70,006-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை இந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 சதவீதம் சரிந்து 68,482-ஆக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட நிறுவன பயணிகள் வாகனங்களின் விற்பனை 44,142-லிருந்து 7 சதவீதம் குறைந்து 41,001-ஆக உள்ளது. வா்த்தக வாகனங்களின் விற்பனை 25,864-லிருந்து 6 சதவீதம் உயா்ந்து 27,481-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.