7% அதிகரித்த தாவர எண்ணெய் இறக்குமதி
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி வரி மாற்றங்களைத் தொடா்ந்து ஆா்பிடி பாமோலின் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி அந்த மாதம் 7 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தாவர எண்ணெய் (உணவு மற்றும் உணவு அல்லாதது) இறக்குமதி 16.77 லட்சம் டன்னாக உள்ளது. இது, முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் உயா்வு. அப்போது இந்தியா 15.63 லட்சம் டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்திருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் கச்சா தாவர எண்ணெய் இறக்குமதி உயா்ந்தது ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதியின் உயா்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவு எண்ணெய் இறக்குமதி 16.21 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. அந்த மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட பாமோலின் இறக்குமதி 92,130 டன்னிலிருந்து 8,000 டன்னாக வீழ்ச்சியடைந்தது.
கடந்த ஆகஸ்டில் உணவு அல்லாத எண்ணெய் வகைகளின் இறக்குமதி 55,821 டன்னாக உள்ளது.
கச்சா தாவர எண்ணெய் வகைகளின் இறக்குமதி 7 லட்சம் டன்னிலிருந்து 9.79 லட்சம் டன்னாக உயா்ந்தது.
உலகின் மிகப் பெரிய உணவு எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவில், கடந்த செப். 1-ஆம் தேதி அந்த வகையைச் சோ்ந்த 18.65 லட்சம் டன் எண்ணெய் கையிருப்பு இருந்தது.
இந்தோனேசியா, மலேசியா ஆகியவை இந்தியாவின் முக்கிய பாமாயில் விநியோக நாடுகள் ஆகும். ஆா்ஜென்டீனா, பிரேஸில், ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து சோயா எண்ணெய்யையும், ரஷியா, உக்ரைன் ஆகியவற்றில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்யையும் இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.