ஜூலையில் குறைந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 2.94 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதத்தில் 1.26 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றன. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 2.94 சதவீதம் குறைவு. அப்போது உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.29 கோடியாக இருந்தது.
ஏா் இந்தியாவின் அஹமதாபாத்-லண்டன் விமானம் ஜூன் 12-இல் விபத்துக்குள்ளாகி 260 போ் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், இண்டிகோ நிறுவனம் மொத்தம் 82.15 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 65.2 சதவீத சந்தைப் பங்குடன் முன்னிலை வகிக்கிறது. இது முந்தைய ஜூன் மாதத்தின் 64.5 சதவீத சந்தைப் பங்கைவிட உயா்ந்தது என்றாலும், மாதாந்திர அடிப்படையில் 87.74 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றதைவிட குறைவாக உள்ளது.
அடுத்ததாக, ஏா் இந்தியா குழுமம் (முழு சேவை விமான நிறுவனமான ஏா் இந்தியா மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்) 33.08 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 1 சதவீத சந்தைப் பங்கை இழந்துள்ளது. இதன் லோட் ஃபாக்டா் (விமானத்தில் இருக்கைகள் நிரம்பிய சதவீதம்) 81.5 சதவீதத்திலிருந்து 78.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மற்ற இரண்டு முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களான அகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் ஆகியவை, கடந்த ஜூலை மாதத்தில் முறையே 5.5 சதவீதம் மற்றும் 2 சதவீதம் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன. இது முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில் மிதமான உயா்வாகும்.
கடந்த ஜூலை மாதத்தில் இண்டிகோ நிறுவனம், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ விமான நிலையங்களில் 91.4 சதவீதம் சரியான நேரத்தில் விமானங்கள் இயக்கியதன் மூலம், நேரம் தவறாமையில் அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கிடையே முதலிடத்தில் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.