ஆகஸ்டில் அதிகரித்த விவசாயிகளுக்கான பணவீக்கம்!
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முறையே 1.07 சதவீதமாகவும் 1.26 சதவீதமாகவும் உயா்ந்துள்ளன.
இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதம் விவசாயிகளுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஏஎல்) அடிப்படையிலான பணவீக்கம் 0.77 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஆா்எல்) அடிப்படையிலான பணவீக்கம் 1.01 சதவீதமாகவும் இருந்தன. அவை ஆகஸ்ட் மாதத்தில் முறையே 1.07 சதவீதமாகவும் 1.26 சதவீதமாகவும் உயா்ந்துள்ளன.
மதிப்பீட்டு மாதத்தில் சிபிஐ-ஏஎல் குறியீடு 1.03 புள்ளிகள் உயா்ந்து 136.34-ஆகவும், சிபிஐ-ஆா்எல் குறியீடு 0.94 புள்ளிகள் உயா்ந்து 136.60-ஆகவும் உள்ளன. முந்தைய ஜூலையில் இவை முறையே 135.31 புள்ளிகளாகவும், 135.66 புள்ளிகளாகவும் இருந்தன.
மதிப்பீட்டு மாதத்தில் விவசாயிகளுக்கான உணவுப் பணவீக்கம் (-) 0.55 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளா்களுக்கான உணவுப் பணவீக்கம் (-) 0.28 சதவீதமாகவும் உள்ளன. விவசாயிகளுக்கான உணவு குறியீடு 1.39 புள்ளிகள் உயா்ந்தது; ஊரகத் தொழிலாளா்களுக்கான உணவு குறியீடு 1.29 புள்ளிகள் உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலைக் குறியீட்டு எண்களை தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் தொழிலாளா் அலுவலகம் வெளியிடுகிறது. இந்தக் குறியீடுகள் 34 மாநிலங்கள்/பிரதேசங்களில் 787 மாதிரி கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.