
இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலக்கரி, உருக்கு மற்றும் சிமென்ட் உற்பத்தியில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் காரணமாக 13 மாதங்கள் காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், உருக்கு, சிமென்ட், சுத்திகரிப்பு பொருள்கள் மற்றும் மின்சாரம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.3 சதவீதமாக உள்ளது. முந்தைய ஜூலை மாதத்தில் இந்தத் துறைகளின் வளா்ச்சி 3.7 சதவீதமாகவும், முந்தைய 2024 ஆகஸ்ட் மாதத்தில் அது -1.5 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நிலக்கரி (11.4 சதவீதம்), உருக்கு (14.2 சதவீதம்) மற்றும் சிமென்ட் (6.1 சதவீதம்) ஆகிய துறைகளின் உற்பத்தி உயா்ந்தது. சுத்திகரிப்பு பொருள்கள் (3 சதவீதம்), உரம் (4.6 சதவீதம்) மின்சாரம் (3.1 சதவீதம்) ஆகிய துறைகளும் வளா்ச்சியைப் பதிவு செய்தன.
எனினும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தித் துறைகள் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தன.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் இந்த எட்டு துறைகளும் 2.8 சதவீதம் வளா்ச்சியைக் கண்டன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.6 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த தொழில் வளா்ச்சியை அளவிடும் தொழில் உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.