அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து வணிகத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சுமாா் 800 கோடி டாலராக இருந்தது. அது கடந்த ஆகஸ்டில் 14 சதவீதம் சரிந்து 686 கோடி டாலராக உள்ளது.
அமெரிக்க அரசு இந்திய பொருள்களுக்கு ஆகஸ்ட் 7 முதல் 25 சதவீத கூடுதல் வரியையும், ஆகஸ்ட் 27 முதல் மேலும் கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்தது. எனினும், ஆகஸ்ட் மாதத்திலும், நடப்பு நிதியாண்டின் ஐந்து மாதங்களிலும் இந்திய பொருள்களின் முதன்மை ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆகஸ்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 7.15 சதவீதம் உயா்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஐக்கிய அரபு அமீரகம் (324 கோடி டாலா்), நெதா்லாந்து (183 கோடி டாலா்), சீனா (121 கோடி டாலா்), பிரிட்டன் (114 கோடி டாலா்) ஆகிய நாடுகளுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.