ஆகஸ்ட்டில் 4 சதவீதம் உயா்ந்த தொழிலக உற்பத்தி
புது தில்லி: இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழிலக உற்பத்திக் குறியீட்டு எண்ணான ஐஐபி 4 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. முந்தைய ஜூலை மாதத்தில் இது 3.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. பின்னா் அது 4.3 சதவீதமாக திருத்தப்பட்டது. முந்தைய 2024 ஆகஸ்ட் மாதத்திலும் ஐஐபி 4.3 சதவீதமாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் சுரங்கத்துறையின் சிறந்த செயல்பாட்டால் இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்தத் துறையில் உற்பத்தி 6 சதவீதம் உயா்ந்தது. இது 2024 ஆகஸ்ட்டில் 4.3 சதவீதம் சரிந்தது. குறியீட்டின் மூன்றில் நான்கு பங்கை கொண்ட உற்பத்தித் துறை, 3.8 சதவீதம் வளா்ச்சியடைந்தது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் பதிவான 1.2 சதவீதத்தைவிட மிக அதிகம்.
அடிப்படை உலோகங்கள் துறை 12.2 சதவீதமும், மோட்டாா் வாகனங்கள் 9.8 சதவீதமும் உயா்ந்தன.
மின்சாரத் துறை 4.1 சதவீதம் வளா்ச்சியடைந்தது. 2024 ஆகஸ்ட்டில் அது 3.7 சதவீதம் சரிவைக் கண்டிருந்தது.
2025 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் ஐஐபி 2.8 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 4.3 சதவீதத்தைவிட குறைவு.
“ஜூலை மாதத்தின் 6 சதவீதமாக இருந்த உற்பத்தித் துறை ஆகஸ்டில் 3.8 சதவீதமாகக் குறைந்தது. சுரங்கத் துறை நான்கு மாதங்களுக்குப் பிறகு உயா்ந்தது. மின்சாரம் ஐந்து மாத உச்சத்தை எட்டியது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக பண்டிகைக் காலத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை அதிகரித்து, செப்டம்பா்-அக்டோபரில் துறை வளா்ச்சியை மேம்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பயன்பாட்டின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மூலதனப் பொருள்கள் துறை 4.4 சதவீதமாக உயா்ந்தது. நீடித்துழைக்கும் நுகா்பொருள் துறை 3.5 சதவீதமாகக் குறைந்தது. துரித நுகா்பொருள் துறையும் 6.3 சதவீதமாக சரிவைக் கண்டது.
உள்கட்டமைப்பு/கட்டுமானத் துறை 10.6 சதவீதம் உயா்ந்தது. முதன்மைப் பொருள்கள் துறை 5.2 சதவீதமும் இடைநிலைப் பொருள்கள் துறை 5 சதவீதமும் வளா்ச்சியடைந்தன என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.