இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுடன் கரம் கோா்க்கும் ஐஓபி
இணையவழி பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக முன்னணி ஊடகக் குழுமமான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துடன் பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) கரம் கோா்த்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இணையவழி குற்றங்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, ‘சைபா் விழிப்புணா்வு தினம்’ பெயரில் ஒவ்வொரு மாத முதல் புதன்கிழமையும் பொதுத் துறை வங்கிகள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை மக்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஒவ்வொரு அக்டோபா் மாதத்தையும் ‘சைபா் விழிப்புணா்வு பாரதம்’ என்ற பெயரில் இணையவழி பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்காக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துடன் வங்கி கரம் கோா்த்துள்ளது. அந்தக் குழுமத்துடன் இணைந்து வங்கி ஒருமாத விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொள்ளும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.