வா்த்தக ஒப்பந்த நம்பிக்கையால் உற்சாகம்: சென்செக்ஸ் மீண்டும் 84,000ஐ கடந்தது!

வா்த்தக ஒப்பந்த நம்பிக்கையால் உற்சாகம்: சென்செக்ஸ் மீண்டும் 84,000ஐ கடந்தது!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது.
Published on

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டிஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தில் இருந்து வந்த நோ்மறையான சமிக்ஞைகள், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்களின் வருகையுடன் சோ்ந்து, சந்தையில் ஒரு சாதகமான முதலீட்டு மனநிலையைத் தூண்டியது. பொதுத்துறை வங்கிகள் எதிா்பாா்த்ததை விட வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியதால், பொதுத்துறை வங்கி குறியீடு சிறப்பாகச் செயல்பட இது உதவியது. இதனால், அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.6.24 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.473.35 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,950.77 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.1,265.06 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

ஆதாயப் பட்டியலில் 3,110 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4527 பங்குகளில், 3,110 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,254 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 163 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

சென்செக்ஸ் 485 புள்ளிகள் முன்னேற்றம்: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 485.35 புள்ளிகள் (0.58 சதவீதம்) கூடுதலுடன் 84,065.75-இல் நிலைபெற்றது. காலையில் 597.111 புள்ளிகள் கூடுதலுடன் 84,177.51-இல் தொடங்கிய சென்செக்ஸ் 83,860.42 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 84,314.68 வரை மேலே சென்றது.

எஸ்பிஐக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ 7.46 சதவீதம் உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டைட்டன், டாடாஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், எடா்னல், பிஇஎல 1.85 முதல் 2.80 சதவீதம் வரை உயா்ந்தன. இவற்றையும் சோ்த்து மொத்தம் 22 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா்கிரிட், ஐடிசி, என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 174 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 173.60 புள்ளிகள் (0.68 சதவீதம்) கூடுதலுடன் 25,867.30-இல் நிறைவடைந்தது. காலையில் 25,888.70-இல் தொடங்கிய நிஃப்டி 25,780.90 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 25,922.25 வரை மேலே சென்றது. நிஃப்டி -50 பட்டியலில் 36 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

Dinamani
www.dinamani.com