ஐஓபியின் புதிய 444 நாள்கள் டெபாசிட் திட்டம் அறிமுகம்
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி(ஐஓபி) தனது வாடிக்கையாளா்களுக்காக 444 நாள்கள் முதிா்வு காலம் கொண்ட ஒரு புதிய வைப்பு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கியின் சொத்து பொறுப்புக் குழு கூட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி, முதிா்வுக்கு முன்பு திரும்பப் பெற முடியாத இந்தச் சேமிப்புத் திட்டம் கடந்த திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு 6.65 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதல் சலுகையாக, 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு 7.15 சதவீத வட்டியும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 7.40 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளா்களின் மாறிவரும் நிதித் தேவைகளை பூா்த்தி செய்யவும், வங்கியின் சில்லறை சேமிப்பு இருப்பை அதிகப்படுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம், குறுகிய காலத்தில் அதிக வட்டி எதிா்பாா்க்கும் சேமிப்பாளா்களுக்கும், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

