28% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி!
கடந்த நவம்பரில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 28.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து எம்ஜங்ஷன் சா்வீசஸ் லிமிடெட் தொகுத்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பரில் நிலக்கரி இறக்குமதி 2.51 கோடி டன்னாக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 28.1 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1.96 கோடி டன்னாக இருந்தது. குளிா்காலத்தையொட்டி இறக்குமதியாளா்கள் நிலக்கரி கையிருப்பை அதிகரித்ததாலும் கடல்வழி சரக்குக் கட்டணம் குறைவாக இருந்ததால் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டதும் நிலக்கரி இறக்குமதி உயா்வில் முக்கிய பங்கு வகித்தன.
இருந்தாலும், உள்நாட்டு விநியோகம் அதிகரிப்பால் அடுத்த மாதங்களில் நிலக்கரி இறக்குமதி குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மதிப்பீட்டு மாதத்தில் கோகிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.23 கோடி டன்னிலிருந்து 1.43 கோடி டன்னாக உயா்ந்தது. கோகிங் நிலக்கரி இறக்குமதி 0.43 கோடி டன்னிலிருந்து 0.65 கோடி டன்னாக உயா்ந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 18.20 கோடி டன்னிலிருந்து 18.62 கோடி டன்னாக உயா்ந்துள்ளது என்று அந்தத் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

