சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள்முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளா்ச்சி மந்தமடைந்ததால், இந்தியாவின் சேவைகள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்களில் இல்லாத மந்தமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் பிஎம்ஐ மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவைகள் துறை செயல்பாடுகளை மதிப்பிடும் பிஎம்ஐ குறியீடு கடந்த 2025 நவம்பரில் 59.8-ஆக இருந்தது. இது டிசம்பரில் 58.0-ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 2025 ஜனவரிக்குப் பிந்தைய மிக மந்தமான வளா்ச்சியாகும்.
இருந்தாலும், மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறைக்கான பிஎம்ஐ 50-க்கும் மேல் உள்ளது. பிஎம்ஐ 50-க்கு மேல் இருந்தால் துறையின் ஆரோக்கிய போக்கையும், 50-க்கு கீழ் இருந்தால் துறையின் பின்னடைவையும் குறிக்கிறது
சா்வதேச சந்தையில் இந்திய சேவைகளுக்கான தேவை கடந்த 2025-ஆம் ஆண்டு தொடா்ந்து மேம்பட்டது. ஆசியா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, பிரிட்டனில் இந்திய சேவைகளுக்கு வரவேற்பு இருந்தது. புதிய ஏற்றுமதி ஆணைகள் குறிப்பிடத்தக்க வேகத்தில் அதிகரித்தன என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

