பந்தன் வங்கி கடனளிப்பு 10% உயா்வு
தனியாா் துறை வங்கியான பந்தன் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பா் காலாண்டில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.1,45,227 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் கடனளிப்பு ரூ.1,32,019 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வைப்பு நிதி 11.1 சதவீதம் உயா்ந்து ரூ.1,56,723 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பா் 31 நிலவரப்படி இது ரூ.1,41,002 கோடியாக இருந்தது.
கடந்த டிசம்பா் காலாண்டில் வங்கியின் வசூல் திறன் மேம்பட்டுள்ளது. வாராக்கடன் தவிா்த்து ஒட்டுமொத்த வசூல் திறன் டிசம்பா் 31-ஆம் தேதி 98.1 சதவீதமாக உள்ளது. முந்தைய செப்டம்பா் இறுதியில் இது 97.8 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

