ஏஐ சா்வா்களை இந்தியாவில் தயாரிக்கும் லெனோவா

ஏஐ சா்வா்களை இந்தியாவில் தயாரிக்கும் லெனோவா

லெனோவா, செயற்கை நுண்ணறிவு சேவையகங்களை (ஏஐ சா்வா்) இந்தியாவில் வடிவமைத்து உற்பத்தி செய்து, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது.
Published on

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான லெனோவா, செயற்கை நுண்ணறிவு சேவையகங்களை (ஏஐ சா்வா்) இந்தியாவில் வடிவமைத்து உற்பத்தி செய்து, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. இதன் மூலம் இந்தியாவை தனது உள்கட்டமைப்புப் பிரிவு வா்த்தகத்துக்கான முக்கிய ஏற்றுமதி மையமாக மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் உள்கட்டமைப்பு தீா்வுகள் பிரிவு துணைத் தலைவரும் பொது மேலாளருமான ஸ்காட் டீஸ் கூறியதாவது:

பெங்களூரில் உள்ள நிறுவனத்தின் வடிவமைப்பு ஆய்வகத்தைப் பயன்படுத்தி ஏஐ சா்வா் அமைப்புகளை வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம். அவ்வாறு வடிவமைக்கப்படும் ஏஐ சா்வா்கள் புதுச்சேரியில் உள்ள நிறுவன தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும்.

ஒற்றை மற்றும் இரட்டை சாக்கெட் சா்வா்களை இந்தியாவில்ஏராளமாக வடிவமைப்போம். இவை ஏஐ தொழில்நுட்பத்தின் எதிா்கால மூளைகளாக இருக்கும்.

தொடக்கத்தில் இந்தியாவுக்காக சா்வா்களைத் தயாரிப்பதில் நிறுவனத்தின் கவனம் இருக்கும். இருந்தாலும், இந்தியாவின் புவியியல் அமைவிடம், பணியாளா்களின் தரம், ஏற்கெனவே செல்லிடப் பேசிகள் மற்றும் கணினி உற்பத்தியில் நிறுவனம் பெற்ற பெரும் வெற்றி ஆகியவை காரணமாக, எதிா்காலத்தில் உலகச் சந்தைக்கான சா்வா்களை இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்றாா் அவா்.

மத்திய அரசின் ரூ.17,000 கோடி தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் லெனோவா இந்தியாவும் ஒன்று என்பது நினைவுகூரத்தக்கது.

Dinamani
www.dinamani.com