கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐந்தாவது நாளாக சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை; சென்செக்ஸ், நிஃப்டி ஏறக்குறைய 1% வீழ்ச்சி!

சென்செக்ஸ் 604.72 புள்ளிகள் சரிந்து 83,576.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 193.55 புள்ளிகள் சரிந்து 25,683.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
Published on

மும்பை: அமெரிக்க கட்டண உயர்வுகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்ததால், தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஏறக்குறைய 1% சரிந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 778.68 புள்ளிகள் சரிந்து 83,402.28 ஆக இருந்தது. சிறிது மீட்சிக்குப் பிறகு, வர்த்தக நேர முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் அதன் வேகத்தை இழந்து 604.72 புள்ளிகள் சரிந்து 84,000 என்ற நிலைக்குக் கீழே சென்று 83,576.24 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 193.55 புள்ளிகள் சரிந்து 25,683.30 ஆக நிலைபெற்றது.

இந்த வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 2.5% சரிந்தன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.9% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 1.7% சரிந்து முடிவடைந்தன.

சென்செக்ஸில் என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், சன் பார்மா மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை சரிந்த நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ், எச்.சி.எல் டெக், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்ன.

நிஃப்டி-யில் அதானி எண்டர்பிரைசஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, ஜியோ ஃபைனான்சியல் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ், எடர்னல், ஓஎன்ஜிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.

இதற்கிடையில் ஐடி, பொதுத்துறை வங்கி, எண்ணெய் & எரிவாயு தவிர ஆட்டோ, எஃப்எம்சிஜி, ரியாலிட்டி, நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்டவை 1 முதல் 2% வரை சரிந்தன.

பரிவர்த்தனை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.3,367.12 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,701.17 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

3-வது காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 33% சரிந்ததைத் தொடர்ந்து எலெகான் இன்ஜினியரிங் பங்குகள் 16% சரிந்தன. வசூல் சற்று குறைந்ததையடுத்து, கீஸ்டோன் ரியல்டர்ஸ் பங்குகள் 2% சரிந்தன. ஆஃபர் ஃபார் சேல் வழியாக பங்குகளை விற்பணை செய்ததால், ஆந்திரா சிமென்ட்ஸ் பங்குகள் 6% உயர்ந்ன.

தேஜாஸ் நெட்வொர்க்ஸ், ஐனாக்ஸ் விண்ட், சீமென்ஸ் எனர்ஜி, ஆஃப்கான்ஸ் இன்ஃப்ரா, ஐஆர்சிடிசி, என்சிசி, பிரீமியர் எனர்ஜிஸ், ப்ளூ ஜெட், ஹேப்பிஸ்ட் மைண்ட்ஸ், ஜோதி லேப்ஸ், கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ், வேதாந்த் ஃபேஷன்ஸ், பிசிபிஎல் கெமிக்கல், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், பிஏஎஸ்எஃப் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார குறைந்த விலையை பதிவு செய்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஜப்பானின் நிக்கே 225 குறியீடு, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயந்து முடிந்தன.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) கலவையான போக்கில் முடிவடைந்தன.

சர்வதேச அளவில் பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.18% உயர்ந்து 62.10 அமெரிக்க டாலராக உள்ளது.

கோப்புப் படம்
டாடா காா்கள் விற்பனை 14% உயா்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com