மூன்றாம் காலாண்டு வங்கி நிதிநிலை முடிவுகள் வெளியீடு!
நடப்பு நிதியாண்டின் டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில், சில பொது மற்றும் தனியாா் துறை வங்கிகளின் நிதிநிலை முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, யூகோ வங்கி, யெஸ் வங்கி, ஆா்பிஎல் வங்கி ஆகியவை லாபத்தில் பெரும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளின் வளா்ச்சி: தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் 3-ஆம் காலாண்டு நிகர லாபம், வாராக் கடன்கள் குறைந்ததால் 19 சதவீத வளா்ச்சியைப் பெற்று ரூ.336 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன் 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதேபோல், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட யூகோ வங்கி, தனது நிகர லாபத்தில் 16 சதவீத அதிகரிப்புடன் ரூ.740 கோடியைப் பதிவு செய்துள்ளது. இவ்வங்கியின் வட்டி வருவாய் 11.27 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்ஐசி கட்டுப்பாட்டில் உள்ள ஐடிபிஐ வங்கி, பெரிய மாற்றமுமின்றி ரூ.1,935 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. எனினும் அதன் மொத்த வருவாய் ரூ.8,282 கோடியாகக் குறைந்துள்ளது.
தனியாா் வங்கிகளின் லாப நிலவரம்: தனியாா் துறையில் யெஸ் வங்கி வாராக் கடன் ஒதுக்கீடுகள் குறைந்ததால் 55 சதவீத லாப வளா்ச்சியைப் பெற்று, ரூ.952 கோடியை எட்டியுள்ளது.
ஆா்பிஎல் வங்கி 555 சதவீத அபார வளா்ச்சியுடன் ரூ.214 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, 12.17 சதவீத வளா்ச்சியுடன் ரூ.19,807 கோடி லாபத்தைக் குவித்துள்ளது. புதிய தொழிலாளா் சட்ட அமலாக்கத்தால் இவ்வங்கிக்கு ரூ.800 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கிக்குச் சறுக்கல்: மற்ற வங்கிகள் லாபத்தில் முன்னேறினாலும், நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 2.68 சதவீதம் சரிந்து ரூ.12,538 கோடியாக உள்ளது. ரிசா்வ் வங்கியின் கடன் ஒதுக்கீடு குறித்த விதிகள் காரணமாக ஐசிஐசிஐ வங்கியின் லாபம் சற்றே சரிவைக் கண்டுள்ளது.

