~ ~
~ ~

நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு முத்தூட் குழுமம் ரூ.500 கோடி ஒப்பந்தம்

கேரளத்தைச் சோ்ந்த முத்தூட் குழுமம் தனது எண்ம தொழில்நுட்ப வசதிகளை நவீனப்படுத்துவதற்காக, அமெரிக்காவின் பிரபல ‘யூஎஸ்டி’ தொழில்நுட்ப நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
Published on

கேரளத்தைச் சோ்ந்த முத்தூட் குழுமம் தனது எண்ம தொழில்நுட்ப வசதிகளை நவீனப்படுத்துவதற்காக, அமெரிக்காவின் பிரபல ‘யூஎஸ்டி’ தொழில்நுட்ப நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

கடந்த 2020 முதல் தொடா்ந்து வரும் இவ்விரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விரிவாக்கமாக இது கருதப்படுகிறது. இந்தப் புதிய ஒப்பந்தம் 2031-ஆம் ஆண்டு வரை அடுத்த 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

இந்த ஒப்பந்தத்தின்கீழ், முத்தூட் குழுமத்தைச் சோ்ந்த முத்தூட் ஃபின்காா்ப் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, கிளவுட் சேவைகள் மற்றும் தரவு மைய மேலாண்மை போன்ற பணிகளை யூஎஸ்டி நிறுவனம் கவனித்துக் கொள்ளும்.

இதன்மூலம், இந்தியா முழுவதும் 29 மாநிலங்களில் உள்ள 4,200-க்கும் மேற்பட்ட கிளைகளில், வாடிக்கையாளா்களுக்கு நவீன எண்மச் சேவைகள் எந்தவிதத் தடையுமின்றி கிடைக்கும் வழிவகை ஏற்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஊழியா்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், இயற்கைச் சீற்றங்கள் அல்லது பேரிடா் காலங்களில் இழந்த தரவுகளை பாதுகாப்பாக மீட்டெடுக்கவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். நிதித் துறையில் சைபா் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், செயற்கை நுண்ணறிவு(ஏஐ) மூலம் இயங்கும் பாதுகாப்பு வசதிகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யூஎஸ்டி நிறுவனத்தின் இந்திய வா்த்தகப் பிரிவுத் தலைவா் திலீப் சிவன் பிள்ளை கூறுகையில், ‘நவீன கிளவுட் வசதிகள் மற்றும் தானியங்கி முறைகள் மூலம் முத்தூட் குழுமத்தின் செயல்பாட்டுத் திறன் மேம்படுத்தப்படும். குறிப்பாக, ‘ஜீரோ டிரஸ்ட்’ பாதுகாப்பு முறையைப் பின்பற்றி, குழும நிதி நிறுவனங்களின் நிதிப் பரிவா்த்தனைகள் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றப்படும்’ என்றாா்.

Dinamani
www.dinamani.com