
சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!
சென்செக்ஸ் 472.77 புள்ளிகள் உயர்ந்து 72,382.47 புள்ளிகளாகவும், நிஃப்டி 133.80 புள்ளிகள் உயர்ந்து 22,555.75 புள்ளிகளாக நிலைபெற்றது.

மும்பை பங்குச் சந்தை - (சித்திரிப்பு)
மும்பை: அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருந்ததால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை தீவிரமாக உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு சரிந்தது. இது வளர்ந்து வரும் சந்தையில், முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்ததையடுத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 722.23 புள்ளிகள் உயர்ந்து 72,631.93 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 472.77 புள்ளிகள் உயர்ந்து 72,382.47 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 133.80 புள்ளிகள் உயர்ந்து 22,555.75 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஐடிசி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி வங்கி, சன் பார்மா, இன்ஃபோசிஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அனுப் பாக்ச்சி நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி வியாழக்கிழமையன்று வழங்கியது.
1992 முதல் போட்டியாளரான ஐசிஐசிஐ வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வந்த பாக்ச்சி, சஷிதர் ஜகதீஷனுக்குப் பதிலாக பொறுப்பேற்கவுள்ளார். வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, அக்டோபர் 27 முதல் அவர் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார். இந்த நியமனம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
சமீபத்திய சரிவுப் போக்கிலிருந்து மீண்ட நிலையில், பங்குச் சந்தைகள் வலுவான ஏற்றத்தைக் கண்டன. பங்குச் சந்தை குறியீடுகள் அரை சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை சமீபத்திய உச்சத்திலிருந்து குறைந்ததால் உலகளாவிய சூழல் சாதகமாக அமைந்தது. இதனையடுத்து, ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 102 டாலராகக் குறைந்ததால், பணவீக்கம் குறித்த கவலைக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டது.
அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, பங்குச் சந்தையை மீட்சியடைய உதவியது. தற்போது ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு மற்றும் நிறுவனங்களின் நிதி முடிவுகள் வெளியாகும் காலம் என்பதால், அனைவரின் கவனம் அதன் மேல் திரும்பியுள்ளது.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அதே சமயம் ஹாங் செங் குறியீடு சற்று உயர்வுடன் முடிவடைந்தன. விடுமுறை காரணமாக தென் கொரியா மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமானது. வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கச் பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமையன்று) ரூ. 9,484.22 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.19 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 102.4 அமெரிக்க டாலராக உள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
Summary
Benchmark equity indices Sensex and Nifty ended higher on Monday.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







