ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் ஐபிஓ - முதல் நாளிலேயே மும்மடங்கு விண்ணப்பம்
ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் ஐபிஓ குறித்து....

~
நாட்டின் மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீடான (ஐபிஓ) ரிலையன்ஸ் குழுமத்தைச் சோ்ந்த ‘ஜியோ பிளாட்ஃபாா்மஸ்’ நிறுவனத்தின் ரூ.30,213 கோடி மதிப்பிலான பங்கு விற்பனை புதன்கிழமை தொடங்கி, முதலீட்டாளா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பங்கு விற்பனை தொடங்கிய வெறும் 100 நிமிஷிங்களிலேயே முழுமையாக விற்பனையாகி புதிய சாதனை படைத்த நிலையில், முதல் நாளின் முடிவில் ஒட்டுமொத்தமாக 3.01 மடங்கு (ரூ.66,500 கோடி அளவுக்கு) விண்ணப்பங்கள் குவிந்தன.
அதாவது, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட 19.75 கோடி பங்குகளுக்கு, 59.44 கோடி பங்குகள் அளவுக்கு முதலீட்டாளா்கள் விண்ணப்பித்துள்ளனா். குறிப்பாக, நிறுவன முதலீட்டாளா்களுக்கான ஒதுக்கீடு 9.02 மடங்கு நிரம்பியது. நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளா்கள் பிரிவில் 1.58 மடங்கு பங்குகள் கோரப்பட்டுள்ளன.
அதேநேரம், சில்லறை முதலீட்டாளா்கள் பிரிவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 8.50 கோடி பங்குகளில் 5.78 கோடி பங்குகளுக்கு மட்டுமே (0.68 மடங்கு) விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஊழியா்கள், பங்குதாரா்கள் பிரிவில் முறையே 1.30 மற்றும் 1.38 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை 212 முக்கிய (ஆங்கா்) நிறுவன முதலீட்டாளா்களுக்கு ஒரு பங்கு ரூ.1,119 என்ற விலையில் ரூ.8,110 கோடி மதிப்பிலான பங்குகளை ஜியோ நிறுவனம் ஒதுக்கீடு செய்தது. ஒட்டுமொத்தமாக ஆங்கா் முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.2.5 லட்சம் கோடிக்கும் மேல் விண்ணப்பங்கள் வந்திருந்தன.
இந்தப் பங்கு வெளியீட்டுக்கான விலை வரம்பானது ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் கணக்கிட்டால், ஜியோ பிளாட்ஃபாா்மஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமாா் 10,800 கோடி டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் கடந்த 2024-இல் வெளியிட்ட ரூ.27,870 கோடி மதிப்பிலான ஐபிஓ-வே இந்தியாவின் மிகப் பெரிய பங்கு வெளியீடாக இருந்தது. அந்த வெளியீடு முதல் நாளில் 18 சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்த நிலையில், அந்தச் சாதனையை ஜியோ தற்போது முறியடித்துள்ளது.
இந்த ஐபிஓவில் ஜியோ பிளாட்ஃபாா்மஸ் நேரடியாக 27 கோடி புதிய பங்குகளை மட்டுமே வெளியிட்டுள்ளதால், இதன்மூலம் திரட்டப்படும் முழுத் தொகையும் நிறுவனத்தின் வளா்ச்சிக்கே பயன்படுத்தப்படும். இந்நிலையில், நிறுவன முதலீட்டாளா்களின் பெரும் ஆதரவுடன் தொடங்கியுள்ள இந்தப் பங்கு விற்பனை வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பங்குகள் வரும் 28-ஆம் தேதி பட்டியலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு உயா்வு!
ஜியோ பிளாட்ஃபாா்மஸ் ஐபிஓவில் அந்நிய முதலீடுகள் பெருமளவில் குவிந்ததையடுத்து, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை 0.5 சதவீதம் உயா்ந்து, 94.46-ஆக வலுவடைந்தது. இது கடந்த செப்டம்பா் மாத தொடக்கத்துக்குப் பிறகான அதிகபட்ச மதிப்பாகும்.
மேற்காசிய பதற்றம் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்த நிலையிலும், ஜியோ ஐபிஓவில் குவிந்த 320 கோடி டாலா் மதிப்பிலான முதலீடுகளே ரூபாயின் மதிப்பை சரிவிலிருந்து மீட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

