குன்றுகளும் குகைகளும் நிறைந்த "நார்த்தாமலை'

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருச்சி சாலையில் அமைந்துள்ள நார்த்தாமலை, சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடமாகும். இதில் மேலமலை, கோட்டைமலை, கடம்பர்மலை, பறையர்மலை, உவக்கன்மலை, ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை, மண
குன்றுகளும் குகைகளும் நிறைந்த "நார்த்தாமலை'
Updated on
2 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருச்சி சாலையில் அமைந்துள்ள நார்த்தாமலை, சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடமாகும்.

இதில் மேலமலை, கோட்டைமலை, கடம்பர்மலை, பறையர்மலை, உவக்கன்மலை, ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை, மண்மலை, பொன்மலை போன்ற 9 மலைகள் (குன்றுகள்) உள்ளன.

தல வரலாறு

ராம - ராவண இலங்கைப் போரில் இறந்த வீரர்களை உயிர்ப்பிக்க வைக்க, வடக்கில் இருந்து சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்த போது அதிலிருந்து சிதறிய துகள்கள் இங்கு விழுந்து 9 குன்றுகள் உருவாகின.

இங்கு பல வகையான அரிய மூலிகைகள் இருக்கின்றன என்று ஒரு கர்ண பரம்பரைக் கதையும், நாரதர் தங்கியிருந்ததால் "நாரதர் மலை' என்ற பெயர் மருவி "நார்த்தாமலை' என அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகிறது.

மேலும், கி.பி. 7, 9 -ம் நூற்றாண்டில் பாண்டியர், பல்லவர்களின் ஆளுகைக்கு உள்பட்டிருந்தது. இவர்களது மேலாண்மைக்கு உள்பட்டு "முத்திரையர்' என்ற சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அப்போது மேலமலையில் பழியிலி ஈச்சுரம் என்னும் குகைக் கோயிலைக் கட்டினர்.

கி.பி. 9 -ம் நூற்றாண்டில் சோழர் வசமாகிய பின் மூன்றாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டில் குலோத்துங்க சோழப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது.

பின்னர், கி.பி. 14 -ம் நூற்றாண்டில் சுல்தானின் வசமும், அதன்பின் விஜயநகரப் பேரரசின் வசமும், பின்னர் மதுரை நாயக்கர்களும், பல்லவராயர்களும் ஆண்டு வந்தனர். தொண்டைமான் மன்னர்கள் பல்லவராயர்களிடம் இருந்து நார்த்தாமலையை தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.

விஜயாலய சோழீச்சுரம்

இக்கோயில் தமிழக கட்டடக் கலையில் ஏற்றமிக்க இடத்தைப் பெற்றுள்ளது.

கோயில் கட்டட வகை நகரா, திராவிட, வேசரா என்னும் 3 வகைப்படும். தமிழகத்தில் உள்ள கோயில்கள் திராவிட கலைப் பாணியில் அமைந்தவை.

வேசரா கலைப் பாணியில் விஜயாலய சோழீச்சுரம் கோயில் முழுமையடைந்திருப்பதை இங்கு காண முடியும். மேற்கு நோக்கியுள்ள இக் கோயில் 1240 சதுர அடிப் பரப்பில் முழுவதும் கல்களினால் அமைந்துள்ளது. இங்கு வட்ட வடிவில் அமைந்திருக்கும் கருவறை இந்து சாஸ்திர நூல்களில் பிரணவ அல்லது ஓங்கார அமைப்பை ஒத்ததாக அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.

பழியிலி ஈச்சுரம்

விஜயாலய சோழீச்சுரம் கோயிலுக்கு முன்புறம் உள்ள பாறையில் குடையப்பட்டுள்ள சிறிய குகைக் கோயிலாகும்.

சிவனுக்குரியதான இங்கு ஓர் சிறிய அறையில் லிங்கமும், துவாரபாலகர் சிற்பங்களும் புதையுண்டு போன நிலையில், பிற்காலத்தில் அவை கண்டுபிடிக்கப்பட்டு குகையின் முன்புள்ள மேடையில் உள்ளன.

மேடையில் உள்ள கல்வெட்டு மாவட்ட வரலாற்றின் முக்கியத்துவத்தை கூறுகிறது. கி.பி.855-896-ம் ஆண்டில் நார்த்தாமலையை ஆண்டு வந்த விடேல் விடுகு முத்திரையன் மகன் சாத்தம்பழியிலி மன்னன் இக்கோயிலை குடைவித்தான். அதனால், இக்கோயில் அப்பெயர் பெற்றது.

சமணர் குடகு

பழியிலி ஈச்சுரம் குகைக்கு வடக்குப் பகுதியில் அதே குன்றில் உள்ள மற்றொரு குகைக் கோயில் சமணர் குடகாகும். குகையின் முன்புறம் பிற்காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் இருந்து அழிந்திருக்க வேண்டும். தற்போது இந்த மண்டபத்தின் மேடை மட்டும் உள்ளது. இந்த மேடையின் 3 பக்கங்களிலும் யானைகள், யாழிகள், காமதேனு போன்ற வியக்க வைக்கும் சிற்பங்கள் எழில் தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.

இவற்றுள் மனித முகமும், சிங்கத்தின் உடலும் கொண்ட ""ஸ்பிங்கஸ்'' என்னும் எகிப்து பாணி சிற்பம் உள்ளது. ஆரம்பக் காலத்தில் சமணர் குகையாக இருந்த இவற்றை முதலாம் மாறவர்மன் காலத்தில் வைணவக் குகையாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என கல்வெட்டு கூறுகிறது.

தர்ஹா

மேல மலையில் உள்ள கோயில்களுக்கு தெற்கே, மலையில் கீழ்நோக்கி குடையப்பட்ட குகையில் முகமது மஸ்தான் என்பவர் அடக்கமான தர்ஹா உள்ளது. மலைக் குன்றில் கீழ் நோக்கி குடைந்தெடுத்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் 10 -ம் நாள் திருவிழாவில் இங்கு சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறுது. இதில் மத பேதமின்றி அனைத்து மக்களும் வழிபடுகின்றனர்.

கடம்பர் மலை

கடம்பர் மலையில் கோட்டை இருந்து அழிந்து போனதற்கான அடையளங்கள் காணப்படுகின்றன. கன்னிமாரா சுனை, பொழுதுபடா சுனை என இரண்டு சுனைகள் உள்ளன.

பறை அரைய பயன்பட்ட மலை "பறை அரையர்' மலையும், கோயில் வாத்தியங்கள் வாசிக்கும் உவக்கர் தங்கியிருந்த மலை "உவக்கன்' மலையும், அக்காலத்தில் கொடுங்குற்றம் செய்தோர், இங்குள்ள உயரமான (ஆளுருட்டி) மலையில் இருந்து கீழே உருட்டிவிடப்பட்டு கொல்லப்பட்டதன் காரணமாக "ஆளுருட்டி' மலையும் இங்கு அமைந்துள்ளன.

போக்குவரத்து வசதி

சென்னையில் இருந்து திருச்சி வழியாக ரயிலிலும், பேருந்திலும் சுமார் 8 மணி நேரம் பயணத்தால் இந்த இடத்துக்கு செல்ல முடியும்.

தங்கும் வசதி

நார்த்தாமலைக்கு அருகே 19 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டையில் உள்ள விடுதிகளிலோ அல்லது 33 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சியிலோ தங்கிச் செல்லலாம்.

செலவு

சென்னையில் இருந்து பேருந்து, ரயில் மூலம் சென்று வர ஒரு நபருக்கு தங்குமிடம், உணவு, போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் செலவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com