வேலூர் என்றாலே வெயிலூர் என்ற அளவில் பெயரெடுத்த இம்மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசும் இயற்கை எழில் கொஞ்சும் கோடை வாசஸ்தலம் இருக்கிறது என்றால் புதிதாகக் கேள்விப்படுவோர் ஆச்சரியத்துடன் புருவங்களை உயர்த்திப் பார்க்கத்தான் செய்வர்.
மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையில் ஆண்டு முழுதும் சுத்தமான காற்று வீசும் மலைவாசஸ்தலம் ஏலகிரி. "ஏழைகளின் ஊட்டி' என்ற அடைமொழியும் இதற்கு உண்டு. சமீபத்திய ஆண்டுகளாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொன்னேரி கூட்டுச் சாலையில் இருந்து 14 கி.மீ. தூரம் பயணித்து ஏலகிரி மலை உச்சியை அடையலாம். வாகனங்களில் சுமார் 30 நிமிட மலைப்பாதை பயணம் ஒரு சுகமான அனுபவமாக அமையும்.
மலைப் பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகவும், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், கபிலர், அவ்வையார், பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நல்லி, பேகன் ஆகிய பெயர்களை இந்த கொண்டை ஊசி வளைவுகள் தாங்கியுள்ளன.
14 குக்கிராமங்களைக் கொண்ட 28.2. சதுர கி.மீ. அமைந்துள்ள இப்பகுதி அதிக குளிர் இன்றி மிதமான குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரத் தொடங்கியுள்ளது.
மாவட்டத்தின் எல்லையான திருப்பத்தூருக்கு செல்லும் வழியில் பொன்னேரி கூட்டுச் சாலை அமைந்துள்ளது. இச்சாலை திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், வாணியம்பாடியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அத்துடன் மிகப் பழமையான ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இச்சாலை வரை பஸ் வசதி எப்போதும் உண்டு.
இதுதவிர, திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் இருந்து நகர பேருந்துகளும் ஒரு மணி நேர இடைவெளியில் இரவு 9 மணி வரை ஏலகிரி மலைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொன்னேரி கூட்டுச் சாலையில் இருந்து ஏலகிரி மலைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இங்கு குறைந்தபட்சமாக 5 டிகிரி செல்சியசும், அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசும் வெப்பம் நிலவுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப் பகுதிக்கு முதன்முறையாக செல்லும் பயணிகள் சுற்றிப் பார்க்க எதுவும் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இருந்தாலும், பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து கிராமிய சூழலில் அமைந்துள்ள இப்பகுதியில் தூய்மையான காற்று வீசுவதை அனுபவிக்கும் ஆர்வம் கொண்டவர்களை அடிக்கடி இங்கே வரவழைக்கிறது.
தொலைநோக்கி இல்லம்
மலைக்கு செல்லும் பாதையில் 14-வது கொண்டை ஊசி வளைவில் தொலைநோக்கி இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறை பராமரிப்பில் உள்ள இந்த இல்லத்தில் நிறுவப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளையும், தொலைவில் அமைந்துள்ள வாணியம்பாடி, திருப்பத்தூர் நகரப் பகுதிகளையும் கண்டுகளிக்க முடியும்.
இரவு நேரத்தில் மலைப்பாதையில் இருந்து வாகனங்களில் கீழே இறங்குவோர் இப்பகுதிகளில் மின்விளக்குகள் நட்சத்திர கூட்டமாக மின்னுவதைக் கண்டுகளிக்க முடியும்.
செயற்கை ஏரி
ஏலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் ஏக்கத்தை போக்குவதற்கு மாவட்ட மற்றும் மாநில நிர்வாகம் பொழுதுபோக்கு அம்சங்களை படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
அதில் ஒன்றுதான் புங்கனூர் செயற்கை ஏரி. 55 ஆயிரம் சதுரடியில் அமைந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி உண்டு. ஏரியின் நடுவில் செயற்கை நீருற்றும், ஏரியை சுற்றிலும் அழகிய பூங்காவும் நிறுவப்பட்டுள்ளன.
ஏரியின் அருகே சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. பூங்காவில் இருபுறமும் புல் தரைகள், அழகிய செடிகள், 5 செயற்கை நீரூற்றுகள், இசைக்கு ஏற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று, செயற்கை சிற்றருவி, தொட்டில் மீன்கள், ரோஜா தோட்டம் என கண்கவர் அம்சங்களும் உண்டு.
மூலிகை பண்ணை
ஏரியின் அருகே மங்கலம் கிராமத்தில் மூலிகை பண்ணை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான மூலிகைகள் கிடைக்கின்றன. அரசு பழப் பண்ணை ஒன்றும் உள்ளது. இதில் மலையில் விளையும் பழங்களை பயணிகள் வாங்கிச் செல்லலாம்.
சுவாமி மலை
சுவாமிமலை என்ற பெயரில் அழகிய சிவன் கோயில் ஒன்றும் ஏலகிரி மலையில் அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் இடமாக சுவாமிமலைப் பகுதி அமைந்துள்ளது. இப்போது இம்மலைப் பகுதிக்குச் செல்ல மங்கலம் கிராமத்தில் இருந்து 3 கி.மீட்டர் தூரத்திற்கு சுற்றுலாத் துறை நடைபாதை அமைத்துள்ளது.
ஏலகிரி தாயார்
மலையில் ரூ.1.08 கோடி செலவில் அண்மையில் ஏலகிரி தாயார் சமேத கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பக்தர்களை பரவசமாக்கும் அழகிய திருவுருவில் இங்கு வேங்கடரமண சுவாமி காட்சியளிக்கிறார்.
பாராகிளைடிங்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் புங்கனூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அத்தனாவூரில் பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்னதாக பாராகிளைடிங் சாகசங்களை உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து செய்து காட்டுவதும் கண்கொள்ளக் காட்சி.
நிலாவூர்
புங்கனூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிலாவூரில் அம்மன் கோயிலும், அதையொட்டி சிறிய பூங்காவும் உள்ளது. இப்பகுதியில் படகு நிலையம் ஒன்றையும் அமைத்துள்ளனர். காட்டு வழிப் பயணமாக, மலைப்பாதையில் 8 கி.மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று ஜலகம்பாறை முருகன் கோயிலை அடையலாம்.
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
ஏலகிரி மலையில் செல்லும் அட்டாறு, மேற்குப்புறமாகச் சென்று ஜடையனூர் கிராமத்தில் ஐலகம்பாறை நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இந்த இடத்தை மலையில் இருந்து சென்றடைவது கடினம். ஆனால் திருப்பத்தூர் வழியாக சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியை அடைவதே சிறந்தது.
கோடை விழா
ஆண்டுக்கு ஒரு முறை அரசு கோடை விழா நடத்துகிறது. இரு தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் சுற்றுப் பகுதி மாவட்டங்கள், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
தங்கும் வசதி
ஏலகிரியை சுற்றி 40-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன. தனியார் விடுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.3 ஆயிரம் வரை வசதிக்கேற்ப அறைகள், ரிசார்டுகள் கிடைக்கும்.
சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்யும் வகையில் யாத்ரி நிவாஸ் தங்குமிடமும் உள்ளது. இங்கு 10 பேர் முதல் 20 பேர் வரை குழுவினராக தங்கும் அளவிலும் அறைகள் உள்ளன.
மலையில் நாம் விரும்பும் இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு வாகன வசதிகள் குறைவு.
செல்லும் வழி
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூரில் இருந்தும் பேருந்துகள் செல்கின்றன.
ஏலகிரி செல்வோர், அங்கு தங்கும் வசதிகள் குறித்து அறிந்து கொள்ளவும், முன் பதிவு செய்து கொள்ளவும் 91-4179-295451 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இதுமட்டும் அல்லாமல் ஏலகிரியில் தனியார் ஹோட்டல்கள் பல உள்ளன. அவற்றிலும் அறைகளை எடுத்துத் தங்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.