கலை வளர்க்கும் தஞ்சாவூர்

தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது தஞ்சாவூர்.
Published on
Updated on
3 min read

தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது தஞ்சாவூர். தஞ்சாவூர் என்றதும் பலருக்கும் நினைவு வருவது தஞ்சை பெரிய கோயில்தான். ஆனால், அதனுடன் இன்னும் பல இடங்களில் தஞ்சாவூரில் பார்க்கத் தகுந்த வகையில் உள்ளன.

தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாக விளங்கிய தஞ்சையில், பெரியகோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது.

இங்கு உலகப் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகம் அமைந்துள்ளது. தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இருப்பதும் தஞ்சாவூரில்தான். இங்கு ஏராளமான கலைகளும் வளர்க்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் பொம்மை என பல பொருட்கள் அந்த ஊரின் பெயரால் புகழ்பெற்று விளங்குகின்றன.

தஞ்சாவூரில் பார்க்க தகுந்த இடங்களில் முதன்மையாக இருப்பது பெரிய கோயில்.

ராஜராஜசோழனால் கட்டப்பட்ட கோயில் தான் பிரகதீஸ்வரர் கோயில். இது 985ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, 1012ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தற்போதும் புதுப்பொலிவுடன் கம்பீரமாக பல்வேறு புகழை பறைசாற்றிக் கொண்டு நிற்கிறது பெரிய கோயில். இங்குள்ள சிவலிங்கம் மிகப்பெரியது என்பதாலேயே இதனை பெரியக் கோயில் என்றும் அழைப்பர்.

பொதுவாக தமிழகத்தில் உள்ள கோயில்களில், வாயில் கோபுரம்தான் உயர்ந்து காணப்படும். ஆனால், இங்கு அவ்வாறில்லாமல், கர்ப்பக்கிரகத்தின் மீதான கோபுரம் 216 அடிக்கு உயர்ந்து காணப்படுகிறது. கோயிலின் உள்ளே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அங்கு வருவோருக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கள் மற்றும் நாயக்கர்களின் பெருமையை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் செல்வோர் முதல் வேளையாக பெரிய கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்துவிட்டு, கோயிலின் அழகில் கரைந்துவிட்டுத்தான் அடுத்த இடங்களுக்குச் செல்வார்கள்.  அந்த அளவுக்கு இது புகழ்பெற்றது. யுனெஸ்கோ அமைப்பினால், இந்த கோயில் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அரண்மனை

தஞ்சையில் அமைந்துள்ள மிகப்பெரிய அரண்மனை தஞ்சாவூர் அரண்மனையாகும். கிழக்குப் பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை நாயக்கர்கள் கட்டத் துவங்கி, மீதியை மராட்டியர்கள் கட்டி முடித்ததாக வரலாறு கூறுகிறது. அரண்மனையைச் சுற்றிலும் மிகப்பெரிய சுற்றுச் சுவரும், கண்காணிப்புக் கோபுரமும் அமைந்துள்ளது.  190 அடி உயரமுடைய எட்டு அடுக்குகளைக் கொண்ட கண்காணிப்புக் கோபுரம், கட்டடக் கலைக்கு மற்றுமொரு உதாரணமாக விளங்குகிறது. அந்த கால மன்னர்கள் பயன்படுத்திய ஒரு கட்டடத்தை நாம் உணர்வுப் பூர்வமாக காணும் போது, அது அவர்களது வரலாறை நமக்கு எடுத்துரைப்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த அரண்மனையின் ஒரு பகுதியில் இருப்பது ராயல் பால்கனி. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட மர வேளைபாடு நிறைந்த பால்கனிகளைக் கொண்டிருப்பதால் இது அவ்வாறு அழைக்கப்படுகிறது.

மனோரா கோபுரம்

தஞ்சாவூரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது மனோரா கோபுரம். இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட இந்த கோபுரம் இருக்கும் இடம் சரபேந்திர ராஜபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. கோபுரத்தை சுற்றி மிகப்பெரிய சுவரும், அரண்களும் உள்ளன. பிரெஞ்சுப் படைக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே நடந்த போரில் ஆங்கிலேயர்களுக்கு வெற்றி கிடைத்தது. இதில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக போரிட்ட சரபோஜி மன்னர், வெற்றியின் நினைவாக இந்த கோபுரத்தைக் கட்டியதாக தகவல்கள் கூறுகின்றன. இது கட்டப்பட்டு 200 ஆண்டுகள் ஆகின்றன. தஞ்சையில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

தொல்காப்பியர் சதுக்கம்

தஞ்சாவூரில் இருந்து தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் செல்லும் சாலையில் தொம்பன் குடிசை என்று கூறப்பட்ட இடத்தில் அமைந்திருப்பதே தொல்காப்பியர் சதுக்கம். இது 1995ஆம் ஆண்டு 8வது உலகத் தமிழ் மாநாட்டின் போது திறந்து வைக்கப்பட்டது. 5 அடுக்குகளைக் கொண்ட சதுர வடிவமுடைய கோபுரமும், அதனைச் சுற்றி அழகான பூங்காவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் மீதிருந்தும் தஞ்சையின் அழகை ரசிக்கலாம்.

வீணை தயாரிக்கும் இடம்

வீணை செய்யும் தொழில் தஞ்சாவூரில் பல காலமாக சிறப்பாக நடந்து வருகிறது. வீணை தயாரிக்கத் தேவையான பலா மரம், பண்ருட்டியில் அதிகமாக விளைவதால் அங்கிருந்து பலா மரங்களை தஞ்சைக்கு வருவித்து அதனைக் கொண்டு அழகான வீணைகளை உருவாக்குகின்றனர்.சரஸ்வதி வீணை, ஏகதண்டி வீணை என இரு வகையான வீணைகள் செய்யப்படுகின்றன. ஒரு வீணையைச் செய்து முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகின்றன. பலா மரம் பால் மரம் என்பதால், புதிய வீணை, பழைய வீணையை விட எடை அதிகமாக இருக்கும். வீணை பழையதாக ஆக, அதன் எடை குறையத் துவங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் வீணைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

தமிழ் பல்கலைக்கழகம்

1981ல் தமிழ் மொழிக்கென்று நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் தான் இது. பல்கலைக்கழகத்தில் பார்க்க என்னவிருக்கிறது என்று கேட்போருக்கு, நிச்சயமாக பார்க்க வேண்டிய இடம்தான் தமிழ் பல்கலைக்கழகம் என்ற பதில்தான் அதனை பார்த்து திரும்புபவர்கள் சொல்வதாக இருக்கும். தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் முக்கியச் சாலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் ஆராய்ச்சிக்காகவும், தமிழில் மேல் படிப்பு படிக்கவும் துவக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் கட்டடம், ஒரு அரண்மனை போல காட்சியளிக்கிறது.

இந்த பல்கலைக்கழகத்திலேயே அமைந்துள்ள மிகப்பெரிய நூலகம், நமது நாடாளுமன்றக் கட்டடத்தை நினைவு படுத்தும் வகையில் அதே வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள மிகப்பெரிய அரங்கம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டடடக் கலைக்கு மற்றுமொரு சிறப்பு என்ன தெரியுமா.. வானத்தில் பறந்தபடி இந்த கட்டடத்தைப் பார்த்தால், அது தமிழ் என்ற எழுத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை நம்மால் பார்க்க முடியாதே என்று ஏங்க வேண்டாம். அதன் மாதிரி வடிவம் மற்றும் புகைப்படமும் பல்கலையில் உள்ளது.

தஞ்சையில் பார்க்க இன்னும் ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com