

பல்வேறு தமிழ் சினிமாக்கள் படம்பிடித்துக் காட்டியுள்ள முட்டம் கடற்கரையைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தமிழகத்தின் அழகிய கடற்கரை என்றால், அதில் முதல் இடத்தை முட்டம் கடற்கரைதான் பிடிக்கும். இங்கு சென்று வந்தவர்களைக் கேட்டாலும் அதையேத் தான் சொல்வார்கள்.
கன்னியாகுமரியில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்திருப்பதுதான் முட்டம் கடற்கரை கிராமம். இந்த கடற்கரை கிராமம் எழில் மிகுந்தது. கடற்கரையை ஒட்டி ஒரு களங்கரை விளக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடற்கரையைப் பார்த்து ரசித்துவிட்டு, நேரே இங்கே வந்தால், நிச்சயம், முட்டம் கடற்கரையின் அழகை நீங்கள் முற்றிலும் உணர்வீர்கள். பலரும் இதனை அறிவதில்லை.
பாறைகள் நிறைந்து காணப்படும் தமிகத்தின் கடற்கரைகளில் இதற்கு தான் முதலிடம். இந்த கடற்கரைக்கு வடமேற்கில் செம்மண் அகழிகளும் உள்ளன. இதுபோன்ற பாங்கை வேறு எங்கும் பார்க்க இயலாது.
மேலும், இங்குள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மீன்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கடற்கரையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பல தமிழ் படங்கள் இங்கு தான் படமாக்கப்பட்டுள்ளன.
முட்டம் கடற்கரைக்குச் செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் நிறைந்துள்ளன. இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், உயர்ந்த சாலையில் இருந்து தாழ்ந்த நிலப்பரப்பில் வளர்ந்துள்ள தென்னை மரங்களைப் பார்ப்பது நிச்சயம் மறக்க முடியாத காட்சியாகவே இருக்கும்.
பாறைப் பகுதிக்கும், கடற்பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் கடற்கரை. எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பாறைப் பகுதிகளில் கூட தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சற்று அபாயமான கடற்பரப்பு என்றும் கூறலாம். இங்கு மெரினாவில் செய்வது போல குளியல் எல்லாம் செய்ய இயலாது. கடற்கரை காற்றில் மிதந்தவாறு நன்றாக ஓடியாடி விளையாடலாம். இங்கு காலை வேலையில் சென்றால் கடற்கரை சுகத்தை நன்றாக அனுபவித்து மகிழலாம். மாலையில் சென்றால், விரைவில் அங்கிருந்து புறப்பட வேண்டியதிருக்கும்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல், கடற்கரை என்றாலே நீண்ட மணற் பரப்பை மட்டுமே அறிந்திருக்கும் மக்களுக்கு இந்த பகுதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இந்த கடற்கரைக்கு அருகே முட்டம் மீனவ கிராமமும் உள்ளது. மீனவர்களின் யதார்த்த வாழ்க்கையை இங்கு கண் முன் காணலாம். மேலும் ஒரு விஷயம், முட்டம் கடற்கரைக்குச் செல்பவர்கள், அங்கு போனதும், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள் படத்தைப் பற்றியும், அங்கு எடுக்கப்பட்ட காட்சிகளைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியாது.
கன்னியாகுமரிக்கோ அல்லது நாகர்கோவிலுக்கோ சுற்றுலா செல்லும் போது, நிச்சயம் இந்த முட்டம் கடற்கரையை சென்று பார்த்து வாருங்கள். இவ்விரு நகரங்களில் இருந்தும் பேருந்து சேவை உள்ளது. இதுவும் ஒரு கடற்கரை என்ற அளவில் இல்லாமல், இது அல்லவா கடற்கரை என்ற அளவில் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் இடமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.