இயற்கையின் அழகோடு பிரம்மாண்ட முருடேஸ்வரர்

கோயில் தரிசனத்துக்காகச் செல்லும்பொழுது கோயிலும் இடமும் இயற்கை வளமும் நன்றாக அமைந்துவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

கோயில் தரிசனத்துக்காகச் செல்லும்பொழுது கோயிலும் இடமும் இயற்கை வளமும் நன்றாக அமைந்துவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

அதுவும் உலகளாவிய பெருமையும் அழகும் சேர்ந்திருப்பின் சொல்லவா வேண்டும்?

மங்களூர் தொடங்கி, சுப்பிரமணியா வரை கர்நாடகாவில் பல ஆன்மிகச் சுற்றுலா தலங்கள் உள்ளன.. இயற்கையை ரசித்தபடி ஆன்மிகச் சுற்றுலா என்றும் சொல்லலாம். இயற்கை வளம், மலை வலம் என எல்லா ஊர்களும் சிறப்பே. ஆயினும் கோயிலுக்காக முருடேஸ்வராவையும் இயற்கை அழகுக்காக ஹோர நாட்டையும் கண்டு களிக்கலாம்.

மங்களூரில் இருந்து 160 கி.மீ. கோவா செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் முருடேஸ்வரா. போகும் வழியை வர்ணிக்க சொற்களே இல்லை. மலைப்பாதை வழியெல்லாம் வழிந்தோடும் நீரோடைகள், ஆறுகள் ஒரு பக்கம். மலை மறுபக்கம். பள்ளத்தாக்கு சோலைகள், தென்னை, பாக்கு மரங்களின் கூட்டம். வளமுடைய பல்வேறு காட்டு மரங்கள். பசுமை! பசுமை! அடாத மழை பொழியும் அகும்பைக் காடு. கண்ணுக்குள் கவிதை பாடும் கானகக் கவின் காட்சிகள்.

அதோடு அரபிக் கடலின் அலை வந்து அழகுக்கு மெருகூட்டும் சாலை சற்றே மேடும் பள்ளமுமாக நம்மைத் துன்புறுத்தும். ஆயினும் அழகுக் காட்சி நம்மைப் பரவசப்படுத்தும்.

 இதோ முருடேஸ்வரா... மூன்று பக்கமும் கடல். நடுவே தீபகற்பம்போல் முருடேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. கோயிலால் ஊருக்கும் அதே பெயர் போலும். சிறிய ஊர். பெரிய கோயில். மீன் பிடித்தலே முக்கியத் தொழில். மீனவர் குப்பம் சூழ்ந்து காணப்படுகிறது. இரண்டு பக்கமும் கடலலை நெருக்க, நடுவே அமைந்த சாலை வழியே உள்ளே செல்கிறோம். ஆ! ஆ! என்ன உயரம். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும். அப்படி ஒரு உயரம். மிக உயர்ந்த கோபுரம். 22 மாடங்கள், 249 அடி உயரம். 18 மாடங்கள் வரை செல்ல லிஃப்ட் வசதி உள்ள ஒரே கோபுரம். அழகிய வேலைப்பாடுகளுடன், ஏக வண்ணம். உலகிலேயே மிக உயரமானது என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு அதன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உள்ளே சென்று சுயம்பு மூர்த்தியான முருடேஸ்வரரைத் தரிசிக்கிறோம்.

கோயில் வரலாறு: ஒரு சமயம் இராவணன் இறைவனிடம் இருந்து ஆத்ம லிங்கத்தைப் பக்தியால் பெற்று இலங்கை கிளம்புகிறான். நடுநிசியில் இயற்கை உபாதை காரணமாக லிங்கத்தை யாரிடமாவது சற்றுநேரம் கொடுத்து வைக்க விரும்புகிறான். விநாயகர் பிரம்மச்சாரி உருவில் அங்கு வருகிறார். மகிழ்ந்த இராவணனும் அவரிடம் உதவி கேட்கிறான். ""மூன்று முறை கூப்பிடுவேன். வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன்'' என்ற நிபந்தனையோடு வாங்கிக் கொள்கிறார்.

 மிக விரைவாக மூன்று முறை கூப்பிட, இராவணனால் வர முடியவில்லை. ஆத்ம லிங்கத்தை, அவ்விடத்திலேயே வைத்து விடுகிறார். ஆத்ம லிங்கம் முருடேஸ்வரர் ஆகிறார்.

 கோயிலைச் சுற்றி அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் மனத்தைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. 123 அடி உயரமுள்ள சிவபெருமான் அழகாகத் தத்ரூபமாகப் படைக்கப்பட்டுள்ளார். சூலம், உடுக்கை, பாம்பு, கங்கணம், தலைமுடி இவை யாவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் இராவணன் ஆத்ம லிங்கத்தைக் கொடுப்பது, நந்தி, பாரதம் எழுதும் விநாயகர், கங்கா ஜடாதாரி, கீதோபதேசம், சூரியன் போன்ற சிற்பங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் சுவரினிலே கடலலைகள் மோதுகின்ற காட்சி எழுப்பும் ஒலி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும். லிப்டில் 18வது மாடம் வரை சென்று, அங்கிருந்து கடலையும் கடல்சார் பகுதிகளையும் பார்ப்பது அச்சமும் ஆர்வமும் கலந்ததாக அமையும். அந்தப் பெரிய சிவன் சிலை மேலிருந்து பார்க்கத் தெளிவாகவும் அழகு மிளிர்ந்தும் காட்சி தரும்.

கோயிலை ஒட்டிக் கடற்கரையில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள ஹோட்டல்,மூன்று மாடிக் கட்டடம் புதுமையும் அழகும் வாய்ந்து விளங்குகிறது. கடற்காற்று வீச அலை மோத கடலைப் பார்த்தபடி அங்கு உணவு உண்ணுதல் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

தெருவெல்லாம் மீன் காய வைத்துள்ளனர். ஊரெல்லாம் மீன் நறுமணம்தான். தங்கும் இட வசதி உள்ளது. அடுத்தது கொடைக்கானல், ஊட்டி போன்ற குளுமை நகர்களோடு போட்டி போடும் ஹோரநாடு. முருடேஸ்வராவில் இருந்து கொல்லூர், சிருங்கேரி சென்றுவிட்டு, நானும் எனது மனைவி பிரேமாவும் ஹோரநாடு போனோம். சுற்றிலும் மலைகள். நடுவே அன்னபூரணி கோயில் கொண்டுள்ள ஹோரநாடு. உள்ளே செல்ல ஒரே சாலை. மழைமேகச் சாரல், பனி மேகக் கூட்டம். பசுமை போர்த்திய மலைக் காடுகள். மரக்கூட்டம், மலர்க்கூட்டம். "சல சல' என ஓடும் வாய்க்கால்கள். தோகை மயில்கள். வெம்மை தெரியாத குளிரவும் செய்யாத இளம்பனிச் சுகம். இப்படி வருணிக்கும் அளவு குளுமைச் சுரங்கம் ஹோரநாடு.

அன்னபூரணி அம்மனையும் தரிசிக்கலாம். அம்மன் அருளோடு இயற்கை அனுபவமும் பெறலாம். வாய்ப்புக் கிடைத்தால் தவறவிடாமல் ஒருமுறை போய்ப் பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com