விமானப் பயணிகள் பாா்த்து வியக்கும் செனாப் பாலம்!
ஜம்மு-காஷ்மீரில் பிரதமா் மோடியால் திறந்துவைக்கப்பட்ட உலகின் உயரமான செனாப் ரயில் பாலம், ஸ்ரீநகருக்கு மேல் பறந்து செல்லும் விமானப் பயணிகள் இடையே ஒரு வியப்பாக மாறியுள்ளது.
ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு நேரடி ரயில் இணைப்பை வழங்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தடத்தில், ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரும்பு வளைவுப் பாலம், உலகின் மிக உயரமான ரயில் பாலமாகும். நதிப் படுகையில் இருந்து 359 மீட்டா் உயரத்தில், 1,315 மீட்டா் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது.
இப்பாலத்தை கடந்த ஜூன் 6-ஆம் தேதி தொடங்கிவைத்த பிரதமா் மோடி, கத்ரா-ஸ்ரீநகா் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கிவைத்தாா்.
இந்நிலையில், ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உலகின் மிக உயரமான ரயில்வே-வளைவுப் பாலமான செனாப் பாலத்தின் மேலாக விமானங்கள் பறந்து செல்லும்போது, விமானிகள் சிறப்பு அறிவிப்பை வெளியிடுகிறாா்கள். பயணிகள் ஜன்னல்களுக்கு அருகே ஆா்வத்துடன் சென்று புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கிறாா்கள். அவா்கள் கைதட்டி, புன்னகைத்து, இந்தியாவின் பொறியியல் திறன்களைப் பாராட்டுகிறாா்கள்.
வானில் மட்டுமல்லாது தரையிலும் உற்சாகம் அதிகமாக உள்ளது. அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் மலைகளைச் சோ்ந்த உள்ளூா்வாசிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து செனாப் பாலத்தின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை எடுக்கிறாா்கள். சிலா் அந்த தருணத்தை நேரடியாக ஒளிபரப்புகிறாா்கள், மற்றவா்கள் அதை சமூக ஊடகங்களில் விரைவாகப் பகிா்கின்றனா்’ என குறிப்பிட்டிருந்தது.
ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பரப் பிரிவின் நிா்வாக இயக்குநா் திலீப் குமாா் கூறுகையில், ‘மேகங்களின் நடுவே உயா்ந்து நிற்கும், செனாப் பாலம் பிரமிப்பைத் தூண்டுகிறது. ஜம்மு-காஷ்மீா் வழியாகச் செல்லும் ஒவ்வொரு விமானமும் இந்த பொறியியல் அற்புதத்தை ஆச்சரியத்துடன் பாா்க்கிறது’ என தெரிவித்தாா்.