தமிழக அரசியலில் மாற்றங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்துவது கூட்டணிகள்தான் என்று அரசியல் நோக்கர்கள் கூற முற்பட்டாலும், கூட்டணிக்கு எள்ளளவும் குறையாத முக்கியத்துவம் காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு என்பதைப் பல தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
எங்களது கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்று திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலுவும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்தாலும், சமீபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலும், பரவலாகக் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் காணப்படும் திமுக மீதான அதிருப்தியும் பல்வேறு யூகங்களுக்கும் இடமளிக்கின்றன. தொகுதி பேரத்தில் காங்கிரஸýக்கு அதிக இடங்களைப் பெற்றுக் கொள்ள செய்யப்படும் முயற்சிகள் என்று திமுக தரப்பால் நிராகரிக்கப்பட்டாலும், கூட்டணியின் நெருக்கத்தை விட இறுக்கம் தான் அதிகம் என்று கருத இடமிருக்கிறது.
இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வழக்கமாக மாநில கமிட்டி, மாவட்ட கமிட்டி என்று நடத்தப்படாமல், சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் மக்களவைத் தொகுதிப் பிரதிநிதிகளாக இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது, தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தில் அனைத்து சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் தயார் என்று அர்த்தம்.
தமிழகத்தில் புத்துணர்ச்சி பெற்ற இளைஞர் இயக்கமாக இளைஞர் காங்கிரஸ் உருமாறி விட்டிருக்கிறதா என்று கேட்டால் காங்கிரஸ்காரர்களே நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறார்கள்.
உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்ட இளைஞர் காங்கிரஸôர் சுமார் 15 லட்சம் பேர். இதில் தேர்தலில் பங்குபெற்று வாக்களித்தவர்கள் சுமார் ஐந்து லட்சம் பேர் மட்டுமே. அதிலும் நிஜமாகவே கட்சி ஈடுபாடுடன் கலந்து கொண்டவர்கள் வெறும் மூன்றே லட்சம் பேர் என்று உண்மையைப் போட்டு உடைத்தார் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர்.
""இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டப்பேரவைத் தேர்தலில் டிக்கெட் உறுதி என்று கனவு காணத் தொடங்கி விட்டனர் பலர். 50 லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாய் வரை செலவு செய்து வெற்றி பெற்றவர்கள் தான் பெருவாரியானவர்கள்.
விளைவு? ராகுல்காந்தி நினைத்ததுபோல கட்சியை வளர்க்க லட்சிய புருஷர்கள் யாரும் உருவாகவில்லை. இளைஞர் காங்கிரசில் கோஷ்டிகளை ஒழிக்க வேண்டும் என்று நினைத்து ராகுல்காந்தி நடத்திய தேர்தலில், தலைவரானவர் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று தன்னை
விளம்பரப்படுத்திக் கொள்கிறார். துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரதராஜன் தன்னை ப.சிதம்பரம் கோஷ்டி என்று கூறிக் கொள்கிறார். பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காயத்ரி என்கிற பெண்மணி முன்னாள் அமைச்சர் பிரபுவுக்கு நன்றி கூறி போஸ்டர் அடிக்கிறார். அப்படியானால் எந்த அணிதான் முன்னணியில் இருக்கிறது?.
தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல்காந்தியை சந்திக்கச் சென்றபோது அவர் சொன்னதாகக் கேள்விப்படும் நக்கலான கமென்ட் ""நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். நான் தோற்றுவிட்டேன்!''.
ராகுல் காந்திக்குத் தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் பிடிப்பதில்லை. அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனியாகப் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். பழையவர்கள் யாருக்கும் சீட் கிடையாது. முற்றிலும் புதிய இளைஞர் பட்டாளத்துடன் அவரே களமிறங்க இருக்கிறார். இப்படி எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுகிறார்கள்.
""வாசனையும் சிதம்பரத்தையும் தங்கபாலுவையும் இளங்கோவனையும் அகற்றி நிறுத்திவிட்டு இவர்களை வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டி போடுவது என்பது மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கும் கதைதான். ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக் தாக்கூரையே எடுத்துக்கொள்வோம்.
அவரால் மு.க. அழகிரியை எதிர்த்து அரசியல் நடத்த முடியுமா? மதுரை விமான நிலையத்திலிருந்து விருதுநகர்தான் போய்விட முடியுமா? திமுக அல்லது அதிமுக கூட்டணி இல்லாமலோ, புதியவர்களை மட்டும் நம்பியோ காங்கிரஸ் களமிறங்குவது இயலாத ஒன்று...'' என்று கருத்துத் தெரிவிக்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஒருவர்.
ராகுல்காந்தி என்னதான் நினைக்கிறாராம்? சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தாலும் ஆட்சி அமைக்கப்போவது என்னவோ அவர்கள்தான். நாம் ஆட்சியில் பங்கு பெற்றால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டி வரும்.
அதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை என்று 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது. மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் கூட்டணி வைத்துக் கொள்வது. இதன் மூலம் கட்சியும் வளரும், மத்தியில் ஆட்சியும் தொடரும் என்பதுதான் ராகுல்காந்தியின் திட்டம்'' என்கிறார் ஓர் இளைஞர் காங்கிரஸ் தலைவர்.
""ராகுல்காந்தி இப்படி எல்லாம் விபரீதமாக யோசிப்பார் என்று தோன்றவில்லை.. அப்படியே யோசித்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அதைத் திருமதி. சோனியாகாந்தி ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தோன்றவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி இல்லையென்றால் மக்களவையில் மட்டும் கூட்டணி வைத்துக்கொள்ள திராவிடக் கட்சிகள் தயாராகுமா என்பதும் சந்தேகம்தான். தனியாகப் போட்டியிடுவது என்று காங்கிரஸ் தீர்மானித்தால் மூதறிஞர் ராஜாஜி கூறுவதைப்போல "வினாசகாலே... விபரீத புத்தி' என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை' என்கிறார் திமுக மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
ராகுல் காந்தியிடம் துருப்புச்சீட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தச் துருப்புச்சீட்டு கூட்டணி மறுப்புச்சீட்டா? என்பது தெரியவில்லை.
ஒன்று மட்டும் உறுதி. காங்கிரஸ் தனித்துப் போட்டி என்று சொன்னாலே பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. குறிப்பாக, பதவியில் இருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.